செல்ஃபி, டிக் டாக்கால் வாழ்க்கையை தொலைத்த இளம் பெண்கள்! மனநல மருத்துவர்கள் வெளியிடும் ஷாக் தகவல்!

இணையதளம், செல்பி, டிக் டொக் என கவனத்தைச் சிதறடிக்கும் சமுக வலை தளங்கள் மீதான மோகத்தால் வாழ்கையைத் தொலைக்கும் பெண்கள் எண்ணிகை அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில், இதுகுறித்த விழிப்புணர்வு பேரணியை, ஹெல்ப் 2 ஹீல் மனநல மருத்துவ அமைப்பு நடத்தியது. இதில், பங்கேற்ற மனநல ஆலோசகர்கள், வளரிளம் பருவம் எனப்படும் டின் ஏஜ் வயதில் உள்ள இளம் பெண்கள், இதில் அதிகம் பாதிப்பிற்கு ஆளாவதாக எச்சரித்துள்ளனர்.

அவர்களின் ஆழ் மனதில் உள்ள ஆசைகளைத் தூண்டி, அவர்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டு, வாழ்கையை அழிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் பாலியல் வன்முறையால் பள்ளி செல்லும் இளம் பெண்கள் உட்பட சிறுமிகள் 53 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

டெல்லி நிர்பயா, பொள்ளாச்சி சம்பவங்கள் இதற்கான உதாரணங்கள் எனத் தெரிவித்த அவர்கள், இனிவரும் காலங்களில் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்பது குறித்தும் வலியுறுத்தினர். மேலும், பெற்றோர்கள் பெண் குழந்தைகள் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், அவர்களை வழிநடத்தும் முறைகள், செலுத்த வேண்டிய அன்பு, அவர்களின் மனநலம் காக்க செய்ய வேண்டியவை குறித்து விளக்கிப் பேசினர். 

உறவுகளின் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும்,  ‘மைம்’ என்னும் நவீன கலை நாடகம் போல அரங்கேற்றம் செய்தும் பேரணியில் விழிப்புணர்வை உண்டாக்கினர். பங்கேற்ற பெற்றோர், கல்லூரி மாணவிகளுக்கு உளவியல் மருத்துவர்கள் மன நலம் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினர்.