தண்ணீர் எடுத்து வந்த ஊழியரை காலில் விழ வைத்த இளையராஜா!

இளையராஜா மிகச்சிறந்த இசைக் கலைஞர். அவருடைய பாடல்கள் சாகாவரம் பெற்றவை. அவருக்கு ஈடாக எவரையும் சொல்ல முடியாது என்பது எல்லாம் உண்மைதான். ஆனால், அவருடைய பாடல்களை கேட்டால் மட்டும் போதும், அவரை நேரில் பார்த்துவிடக் கூடாது என்று பலரும் சொல்வது ஏன் என்பதை, விழாவில் நிரூபித்துக் காட்டிவிட்டார் இளையராஜா.


விழா ஏற்பாடுகள் உருப்படியாக செய்யப்படவில்லை. அரங்கில் தண்ணீர் வசதி, டாய்லெட் வசதி எதுவும் செய்து தரப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு வந்த 2,000, 5,000 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களைக்கூட அரங்கினுள் அனுமதிக்கவில்லை. ஏனென்று கேட்டால், ஹவுஸ்ஃபுல் என்று சொல்லப்பட்டது. அதனால் டிக்கெட் வாங்கி வந்தவர்கள் வாசலில் கூப்பாடு போடுவதையும், வயிற்றெரிச்சலுடன் திரும்பிப் போவதையும் பார்க்க முடிந்தது.

எத்தனை சீட் போடமுடியும் என்றுகூட கணக்கு தெரியாமல், வந்த வரையிலும் லாபம் என்று டிக்கெட் விற்பனை செய்து காசு பார்த்திருக்கிறார்கள். உள்ளே போகாதவர்கள் நிலைமை மோசம் என்றால், உள்ளே போனவர்கள் நிலைமை அதைவிட பரிதாபம். கேவலமான சீட்டிங் அரேஞ்ச்மென்ட் என்பதால், யாரும் நிம்மதியாக அமர முடியவில்லை. தண்ணீர் பாட்டிலை வாங்க அலைந்தவர்களை தன்னுடைய இனிய குரலால் திட்டித் தீர்த்தார் இளையராஜா.

தண்ணி தவிக்குதுன்னு அங்கேயும் இங்கேயும் அலைஞ்சா என்ன அர்த்தம். 500 ரூபாய் டிக்கெட் வாங்கிட்டு 2,000 ரூபாய் சீட்ல உட்கார்ந்திருக்கீங்க. நீங்க எல்லோரும் என் பாட்டுலதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கீங்க, உங்களுக்காகத்தான நான் 4மணி நேரம் இங்கே நிற்கிறேன், உங்களால இது முடியுமா? என்று கொந்தளித்தார். தண்ணீர் பாட்டிலைக் கொண்டுபோய்க் கொடுத்த உதவியாளர் ஒருவரை மன்னிப்பும் கேட்க வைத்தார். 

தண்ணீர் கிடைக்காமல்தான் மக்கள் அங்குமிங்கும் அலைபாய்கிறார்கள் என்று இளையராஜாவிடம் சொன்னபோது, அப்படின்னா தண்ணி குடிக்காம இருக்க முடியாதா என்று திருப்பிக் கேட்டாராம். இசை நிகழ்ச்சிக்குப் போய்வந்த ஒருவர் மிகுந்த வருத்தத்துடன் பேசினார். தண்ணி முக்கியமா, இசை முக்கியமான்னு கேள்வி கேட்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வரலைன்னா நான் வேற மாதிரி பதில் சொல்லியிருப்பேன். இப்போ சொல்றேன், எனக்கு தண்ணிதான் முக்கியம் என்கிறார். 

என்ன சொல்லப்போகிறீர்கள் ராஜா..?