குளிப்பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு ஊர் இருக்கிறது என்றால், அது குற்றாலம் மட்டும்தான். சங்ககாலப் பாடல்களில் பாடப்பட்ட இந்த ஊரில் இரண்டு நாட்கள் மட்டும் தங்கிச்சென்றால், ஓர் ஆண்டுக்கான உற்சாகம் கிடைக்கும் என்பது உறுதி.
குற்றாலத்தில் குளிக்கலைன்னா அடுத்த பிறவியில கழுதையா பிறந்து கஷ்டப்படணுமாம்! சீக்கிரம் மூலிகைக் குளியலுக்குக் கிளம்புங்க!

எல்லோரும் எப்படியாவது இங்கே குளித்து இன்புற வேண்டும் என்பதற்காகவோ, என்னவோ, நம் பெரியவர்கள், குற்றாலத்தில் குளிக்கவில்லை என்றால், அடுத்த பிறவியில் கழுதையா பிறந்து கஷ்டப்பட வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். குற்றாலத்தில் என்ன ஸ்பெஷல் என்று பார்க்கலாமா.
குன்று + ஆலம் என்பதே குற்றாலம் ஆகும். குன்று என்றால் மலை. ஆலம் என்றால் குளிர்ந்த நீர். அதாவது குன்றில் இருந்து குளிர்ந்த நீர் கொட்டுவதால் இந்த அருவி குற்றாலம் என்று பெயர் பெற்றுள்ளது. இதனாலேயே திருஞானசம்பந்தர் தனது பாடலில் குற்றாலம் அருவியை குன்றத்து அருவி என்று பாடினார். பொதிகை மலை அடிவாரத்தில் மெல்லிய தென்றலுடன், பூஞ்சாரல் தூறும் குற்றாலத்தில் குளிப்பது ஆனந்தத்தை மட்டுமல்ல, உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளித்தருகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜீன் மாதம் சீசன் துவங்கி ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கிறது. அதன்பிறகு மழைக்காலத்தில் குளிக்க முடியாத அளவுக்கு தண்ணீர் விழும் என்பதால் சாரலை ரசிக்க இயலாது.
குற்றாலம் செல்பவர்களில் பலரும் பார்த்தேயிராத ஒரு அருவி என்றால் அது தேனருவி. இங்கு செல்வதற்கு வனத்துறை அனுமதி தரவில்லை. திரிகூட மலையில் இருந்து உருவாகும் சித்ரா நதி, மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து நீரோடையாக செல்கிறது. இந்த அருவியின் பாறைகளில் அதிகளவு காட்டு தேனீக்கள் உண்டு. மிகவும் ஆபத்தான அருவியான இங்கு குளிக்க செல்பவர்கள் மெயின் அருவியில் இருந்து சுமார் 5 கி.மீ. அடர்ந்து முரட்டு பாதை வழியாக செல்ல வேண்டும். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் இங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மெயினருவியில் இருந்து இரண்டை கி.மீ. தொலையில் காட்டுப்பகுதியில் இந்த அருவி உள்ளது. தேனருவியில் இருந்து சுமார் இரண்டை கி.மீ. தூரம் ஓடி வந்து 30 அடி உயரத்தில் இருந்து அருவியாக கொட்டுகிறது. இங்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் அங்கு அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை வழிபட்டு செல்லலாம். இந்த அருவிக்குச் செல்லும் வழிகளும் தற்போது மூடப்பட்டுள்ளன.
மெயின்அருவிஇதுதான் அனைவரும் குளிப்பதற்கு ஏற்ற அருவியாக இருக்கிறது. செண்பகாதேவி அருவியில் இருந்து வரும் நீர், 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து, அதன்பிறகு கீழே வழிகிறது. குற்றாலம் பேருந்து நிலையத்தின் மிக அருகிலேயே அமைந்துள்ள அருவி என்பதால் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்குள்ள குற்றாலநாதர் சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது என்பதால் அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் சுவாமியை தரிசிப்பதை தவிர்ப்பது இல்லை.
குற்றாலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஐந்தருவி. சுமார் 40 அடி உயரத்தில் இருந்து 5 கிளைகளாக பரந்து விரிந்து தண்ணீர் கொட்டும். 2 கிளைகளில் பெண்களும், 3 பிரிவுகளில் ஆண்களும் குளிக்கலாம். ஓரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குளித்து மகிழலாம் என்பதால் இந்த அருவிகளில் குளிக்க அனைத்து தரப்பினரும் விரும்புவர். இந்த அருவிக்கரையில் சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளதால் பக்தர்களுக்கும் விருப்பமாக அருவியாக இது விளங்குகிறது.
ஐந்தருவிக்கு மேலே சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. இங்கு முக்கிய பிரமுகர்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவர். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் இந்த அருவிகளை சுற்றுலா பயணிகள் அவ்வளவாக விரும்புவது இல்லை. பிரத்யேக பாஸ் வாங்கிச்சென்றால் நிம்மதியாக குளிக்கலாம்.
புலியருவிகுற்றாலம் பேருந்து நிலையத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் சமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புலியருவி. இந்த அருவிக்கு பாசுபதசாஸ்தா அருவி என்ற பெயரும் உண்டு. 3 பிரிவுகளாக குறைந்த அளவு உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதால் குழந்தைகள் இங்கு குளிக்க மிகுந்த ஆசைப்படுவர். இதனால் குழந்தைகளுடன் சுற்றுலா வருபவர்கள் அதிகளவு இந்த அருவியையே முற்றுகையிடுவர்.
குற்றாலத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த அருவி அழகனாறு என்ற நதியில் இருந்து உற்பத்தியாகிறது. சுமார் 100 அடி உயரத்தில் படந்;து தண்ணீர் கொட்டுகிறது. இங்கு குளிப்பதை சுற்றுலா பயணிகள் அதிகளவு விரும்புவதற்கு காரணம் அமைதியான சூழலில் அமைந்துள்ள அருவியாகும்.
தேனருவிக்கு மேலே சிறிது தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. இங்கு அருவி பால் போல பொங்கி வருவதால் பால் அருவி என்று பெயர் வந்தது. இந்த அருவிக்கு செல்லும் பாதை மிகவும் அபாயகரமானதாகும். இதனால் சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் குளிப்பது மட்டுமின்றி இறைவன் தரிசனமும் முக்கியம். குற்றால நாதர் ஆலயத்தில் இருந்து அருவியை தரிசிக்க முடியும். மெலும், இங்கிருக்கும் சித்திர சபையும் புகழ்பெற்றது. குற்றாலநாதர் கோயிலுக்குச் சொந்தமான சித்திர சபையில் மூலிகைகளின் சாறு கொண்டு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அரிய பழங்கள்இக்காடுகளில் உள்ள மரங்களில் இருந்து அரியவகை பழங்கள், காய்கள் கிடைக்கின்றன. ஒயிட்டு என்ற ஆங்கிலேயர் இம்மலையில் மொத்தத்தில் இரண்டாயிரம் அரியவகை மலர்கள், செடிகள், மரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார். இம்மலையில் இருந்து மலை வாழைப்பழம், லாப்பழம், மாம்பழம், மங்குசுதான், சீதாப்பழம், கொய்யாப்பழம் போன்ற பழங்களும், நெல்லிக்காய், தேங்காய், மாங்காய் போன்ற காய்களும், பாக்கு, தேன், கிழங்குகள் முதலிய உணவுப் பொருட்களும், தேக்கு, கோங்கு, சந்தனம் முதலிய விளைபொருட்களும், செண்பகம், மல்லிகை போன்ற மலர்களும் கிடைக்கின்றன.
காட்டுப் பகுதிகளில் உள்ள மூலிகைகள், பழங்கள், காய்கள் இவற்றைச் சுமந்து கொண்டு குற்றால அருவிகள் தண்ணீரைக் கொட்டுகின்றன. இதனால் குற்றால அருவிக் குளியலை மூலிகைக் குளியல் என்று அழைக்கிறார்கள். இந்த மூலிகைக் குளியல் உலகில் வேறு எந்த ஊரிலும் இல்லாத புதுமை உடையது. அனுபவித்துப் பாருங்களேன்..