18 ஆண்டுகளுக்குப் பின், கொலை வழக்கு ஒன்றில் மர்ம முடிச்சை போலீசார் அவிழ்த்துள்ளனர்.
பெற்ற மகனை கொடூரமாக கொலை செய்த தாய்! 18 ஆண்டுகளுக்கு பின் மருமகனுடன் சிக்கினார்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

இதுபற்றி ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் கூறியதாவது:
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக, முகமது காஜா என்பவர் கொலை செய்யப்பட்டார். இவரது தாய் மசூதா பீ.
மசூதா பீ, கணவனை இழந்த விதவை ஆவார். இவருக்கு, காஜா உள்பட 8 குழந்தைகள், அவர்களில் 3 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள். இந்நிலையில், கணவனை இழந்த
மசூதா பீ, தனியாளாக, தனது குழந்தைகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால், 2வது மகன் முகமது காஜா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால், அவருக்கு மட்டும் திருமணம் செய்யாமல் மசூதா பீ இருந்துள்ளார்.
இதனால், காஜா ஒரு ஊதாரியாக, தினசரி குடிக்கவும், சீட்டாடவும், மசூதா பீயிடம் காசு கேட்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். ஒருகட்டத்தில், கடும் மன விரக்தி அடைந்த மசூதா பீ, தனது மகனை கொலை செய்ய தீர்மானித்துள்ளார். இதன்பேரில், தனது 4வது மற்றும் 5வது மருமகன்களிடம் உதவி கோரியுள்ளார். அவர்கள், ஒரு ஆட்டோ டிரைவரை அழைத்து வந்துள்ளனர்.
இதன்படி, இவர்கள் 3 பேரும் சேர்ந்து காஜாவை மது அருந்த அழைத்துள்ளனர். மது அருந்தும்போது, திடீரென காஜாவின் தலையில் கிரானைட் கல்லைப் போட்டு கொன்றுவிட்டனர். இதற்காக, மசூதா பீ, பணம் கொடுத்துள்ளார். இந்த கொலையை செய்தது யார் என, கடந்த 18 ஆண்டுகளாக, தேடிவந்த ஐதராபாத் போலீசார், ஒருவழியாக, விசாரணையை தற்போது நிறைவு செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், 3 பேரையும் கைது செய்துள்ளோம். ஆனால், ராஜமாதாவாகச் செயல்பட்ட மசூதா பீ இன்னமும் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் தெரிவித்தார்.