ஐதராபாத்: இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களில் எபோலா வைரஸ் எதுவும் இல்லை என்று ஐதராபாத் போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
கொக்க கோலா, பெப்சியில் எபோலா வைரஸ்? போலீசார் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

ஐதராபாத் போலீஸ் பெயரை பயன்படுத்தி, கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. அந்த செய்தியில், ''ஐதராபாத் போலீஸ் சார்பா இந்த முன்னெச்சரிக்கை தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா முழுக்க விற்பனையில் உள்ள மாஸா, ஃபேன்டா, 7அப், கோக கோலா, மவுண்டென்ய் ட்யூ உள்ளிட்ட குளிர்பானங்களில் எபோலா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்த துளிகள் கலந்துவிட்டது. எனவே, இவற்றை குடிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது ஐதராபாத் போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. இப்படி எந்த சுற்றறிக்கையும் விடவில்லை என்றும், இத்தகைய வதந்தி பரப்புவது தண்டனைக்கு உரிய செயல் என்று, ஐதராபாத் போலீசார் தற்போது சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த மாதத்தில், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய குற்றத்திற்காக, 3 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.