மூட்டை மூட்டையாக பணம், கட்டி கட்டியாக தங்கம்! நேர்மையான பெண் தாசில்தாரின் ஜலபுலஜங்!

ஐதராபாத்: சிறந்த தாசில்தார் விருது பெற்ற பெண் வீட்டில் இருந்து பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் வருவாய் தாசில்தாராக பணிபுரிபவர் லாவண்யா. இவர், சிறப்பாகப் பணிபுரியும் தாசில்தார் என்ற விருதை, 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றார். இந்நிலையில், இவரது உதவியாளரும்,  விஏஓ.,வாகப் பணிபுரிபவருமான ஆந்தையா என்பவர் உள்ளூர் விவசாயி ஒருவரிடம்  ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதன்பேரில், தெலுங்கானா மாநில லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, ஆந்தையா தான் வாங்கிய லஞ்சப்பணத்தை தாசில்தார் லாவண்யாவிற்கு பட்டுவாடா செய்வதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில், ஐதராபாத்தில் உள்ள லாவண்யாவின் வீட்டில், லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ரூ.93.50 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பணம், 400 கிராம்கள் மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

சிறந்த தாசில்தார் விருது பெற்ற பெண் அதிகாரியின் வீட்டில் இருந்து இவ்வளவு லஞ்சப்பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.