கேன்சருக்கு கணவன் பலி! தொடரும் துயரம்! ஆனாலும் இளம் மனைவி செய்யும் நெகிழ்ச்சி செயல்!

கொல்கத்தா: கணவனை புற்றுநோய்க்கு பறிகொடுத்த பெண், மற்ற நோயாளிகளுக்கு உதவி செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.


கொல்கத்தாவை சேர்ந்தவர் டிம்பிள் பார்மர். இவரது கணவர் நிதேஷ் பிரஜாபத். இருவரும் ஐஐஎம் கல்கத்தா கல்வி நிறுவனத்தில் எம்பிஏ படிக்கும்போது காதலித்து திருமணம் செய்ய தீர்மானித்தனர். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த சில ஆண்டுகளிலேயே, நிதேஷ்க்கு, கொலோரெக்டல் கேன்சர் எனப்படும் பெருங்குடல்- மலக்குடல் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது.

மிக இளமை துடிப்புடன்  இருந்த நிதேஷ், இந்த புற்றுநோயால் மிகவும் வெளிறிப்போனார். எனினும், மனதை தளர விடாமல் சிகிச்சை பெற்று வந்த நிதேஷ், 2016ம் ஆண்டில் ஓரளவு உடல்நலம் தேறினார். 2017ம் ஆண்டு எம்பிஏ பட்டம் பெற்ற இருவரும் அதே நாளில், தங்களது கல்வி நிறுவன வளாகத்திலேயே திருமணம் செய்ய நிச்சயித்தனர்.  

ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே நிதேஷின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. அவரது மலக்குடல்-பெருங்குடல் புற்றுநோய் படிப்படியாக வளர்ந்து நுரையீரல், இடுப்பு மற்றும் சிறுகுடல் பகுதிகளையும் தாக்கியது. இதனால், நடமாட முடியாத நிலைக்கு நிதேஷ் தள்ளப்பட்டார். எனினும், காதலை கைவிடாத டிம்பிள் அவரையே திருமணம் செய்துகொண்டார்.

நிதேஷ்க்கு எப்படியேனும் நல்ல சிகிச்சை செய்து காப்பாற்ற வேண்டும் என்பதையே முழுமூச்சாக டிம்பிள் செய்தார். இதற்காக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல மருத்துவர்களின் தொடர்பையும் பெற்றார். ஆனால், மார்ச் 2018 அன்று நிதேஷ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்.  

காதல் கணவன் உயிரிழந்தாலும், அவனைப் போல புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தீர்மானித்த டிம்பிள், Love Heals Cancer என்ற சேவை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இதன்மூலமாக, 50க்கும் அதிகமான மருத்துவ நிபுணர்களை பணிக்கு அமர்த்தி, புற்றுநோயால் பாதிக்கப்படுவோருக்கு மிகக் குறைந்த விலையில் தரமான சிகிச்சை வழங்கும் பணிகளை டிம்பிள் மேற்கொண்டுள்ளார். தனது கணவனை காப்பாற்ற முடியாவிட்டாலும், எளிய மக்களை காப்பாற்ற இந்த முயற்சி உதவும் என, டிம்பிள் நம்பிக்கை தெரிவிக்கிறார்...