சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என்று தப்பித்துச் செல்பவர்கள், பல மாவட்ட எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு கோரன்டைன் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை அழகாக வடித்திருக்கிறார் வித்யா.
திடீர் கோரன்டைன் எப்படி இருக்கும். இதோ ஒரு நிஜ அனுபவம்.

மூன்று மாதங்களாக அப்பா அம்மா சொந்த ஊரில் இருக்க, நான் மட்டும் சென்னையில் தனியாக இருக்கும்படி ஆனது. மூன்று வேளையும் எனக்கு நானே சமைத்துச் சாப்பிடுவது என்பது சலிப்பூட்டியதோடு, ஒரு வேளைக்கு வைத்த உணவே எனக்கு மூன்று வேளைக்கு வந்தது. நாட்கள் செல்லசெல்ல, சென்ற வாரம் ஊருக்குக் கிளம்பிவிடலாம் எனத் தீர்மானித்து எப்படிச் செல்வது என்று தேட ஆரம்பித்தேன்.
யாரும் ஊருக்குத் துணைக்கு வர இல்லை என்பதால் தனியாகவே சென்று விடலாம் என்று தீர்மானித்து ஊருக்குப் போன வெள்ளிக்கிழமை மதியம் காரில் கிளம்பினேன். அந்தப் பயணம் புது அனுபவமாக இருந்தது. ஜூன் மாத பூக்கள் எப்போதும் இஷ்டம். நெடுஞ்சாலை முழுக்க மஞ்சள் சிகப்புப் பூக்கள். 10 மணி நேரப் பயணம். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டிலிருப்பேன் என்று நினைத்துக் கொண்டு சென்றபோது பரிசோதனை மையத்தில் வழிமறித்து கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்றார்கள்.
சரி என்று டெஸ்ட் எடுத்தேன். எடுத்த பிற்பாடு ரிசல்ட் வரும்வரை நீங்கள் இங்கு தான் இருக்க வேண்டும், இரண்டு நாட்கள் ஆகும் என்றார்கள். எனக்கு என்னடா இது என்றாகிவிட்டது. வீட்டுக்குப் போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் , இப்படிச் செய்கிறார்களே என்று எரிச்சல் வந்தது. நான் என்னை வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்வதாகச் சொன்னேன். அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. வீட்டில் அம்மா எனக்காகக் காத்துக் கொண்டு இருந்தாள். இவ்வளவு கிட்ட வந்தாச்சு ஆனா வீட்டுக்குப் போக முடிலயே என்ற ஏக்கமும் எரிச்சலும் எனக்குள் நிறைந்திருந்தது.
எங்கே தங்க வைப்பீர்கள் என்று கேட்டேன். ‘ஒரு காலேஜில், தனி அறை கொடுக்கப்படும். பத்திரமாக இருப்பீங்க. ரிசல்ட் வந்ததும் நீங்கள் செல்லலாம்’ என்று சொன்னார்கள். என்னோடு வந்த டிரைவர் அண்ணாவை என்னை அந்தக் காலேஜில் விட்டுவிட்டுத் திரும்பிச் செல்லச் சொல்லிவிட்டேன்.
இதெல்லாம் இரவு 1 மணிக்கு நடந்து கொண்டிருந்தது.அங்கே காலேஜின் வெளியே அறைக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான், தனி அறை என்று இங்கு ஏதும் கிடையாது; பெரிய சத்திரம் போல ஒரு ஹாலில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது; அனைவரும் அங்கு தான் தங்க வேண்டும் என்றார்கள். எனக்குத் தூக்கிவாறிப் போட்டது. எனக்கு மட்டும் இல்லை. அங்கு இருந்தவர்களில் பெரும்பாலானோருக்கு அதிர்ச்சி. புறக்கணித்தார்கள். அங்கே தனியாகப் பயணித்து வந்தது நான் மட்டும் தான். மற்றவர்கள் அனைவரும் குழுவாக அல்லது குடும்பமாக வந்திருந்தார்கள்.
எனக்குத் தனி அறை வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் நான் சண்டை போடுவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. மற்றவர்கள் எல்லாரும் மெல்ல ஏதோ ஓர் இடம் கிடைத்தால் போதும் என்று சோர்ந்து அவரவர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். என்னைப் பெண்கள் மட்டும் இருக்கும் அறையைக் காண்பித்து, அங்கே தங்கிக் கொள்ளுமாறு சொன்னார்கள். நான் முடியவே முடியாது என்று மறுத்தேன். கடைசியில் எப்படியோ எனக்கென ஒரு அறை கிடைத்தது.
அது எப்படியாகப்பட்ட அறை என்றால், அந்த கல்லூரியின் பரிசோதனைக் கூடம். தாழ்ப்பாள் இல்லாதாக் கதவு , போதாத குறைக்கு ஒரு முழு எலும்புக்கூடு. ‘இங்க தங்கிக் கொள்ள முடியுமா ?’ என்று அந்தப் போலீஸ் கேட்டார். நான் உடனே சரி என்றேன். ‘கதவை அடச்சுக்கோங்க. இங்க வேற ரூம் இல்ல’ என்றார் . அவரிடம் அவரது அலைபேசி எண்ணைக் கேட்டு எதற்கும் வாங்கிக் கொண்டேன். அதிகாலை மணி 2 இருக்கும். என்னடா இடம் இது என்ற எரிச்சல் எனக்கு அடங்கவே இல்லை.
பயண அசதியில் தூங்கிவிட்டேன். அதிகாலை அதே போலீஸ் வந்து , சாப்பாடு வந்துவிட்டது என்று தகவல் தெரிவித்தார். போய் பல் தேய்க்கலாம் என்று சென்று பார்த்தால், பைப்பில் தண்ணீர் வரவில்லை. இருந்த கடுப்பில் பல்லே தேய்க்காமல் வந்த சாப்பாட்டை அவிழ்த்துச் சாப்பிட ஆரம்பித்தேன். இட்லி மிகவும் நன்றாக இருந்தது. இரவு சாப்பாடு சாப்பிடவில்லை என்பதால் கூட நன்றாக இருந்திருக்கலாம் என்று எரிச்சலில் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
எப்போடா ரிசல்ட் வரும் எப்போடா இங்கிருந்து கிளம்பலாம் என்றிருந்தது. அறைக்கு வெளியே சென்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று வெளியே வந்தேன். சில ஆண்கள் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். என் முகத்தில் இருந்த அதிருப்தி அவர்கள் முகத்திலும் தென்பட்டது. என்னங்க இப்படி இருக்கு என்று ஆரம்பித்து, இப்படியாவது இருக்கே. இதெல்லாம் நேத்து இதவிட மோசமா இருந்துச்சு. நாங்க தான் சண்டபோட்டு கொஞ்சம் சரிபண்ண வெச்சோம். என்று இருவர் சொன்னார்கள்.
கொஞ்ச நேரம் பேசிவிட்டு என் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டேன். தூக்கத்தின் நடுவில் , யாரோ கதவைத் தட்டினார்கள். யாரென்று பார்த்தால், பத்து நிமிஷம் பேசிவிட்டு வந்த பையன்களில் ஒருவன், எனக்கும் சாப்பாடு எடுத்து வந்திருந்தான். எதிர்பார்க்கவே இல்லை. என் முகத்தில் அன்றைக்கான முதல் புன்னகை அப்போது தான் வந்தது.
தேங்க்ஸ் சொல்லி வாங்கிக் கொண்டு திரும்பவும் தூங்கிவிட்டேன். மாலை நாலு மணிக்கு எழுந்து சாப்பாட்டை உலைத்தேன். சாப்பாடு அப்போதும் நன்றாக இருந்தது. தூங்கியதில் ஒரு தெளிவு கிடைத்தது. நொந்து கொண்டு இங்கு இருக்கவா இல்லை நம்மை இந்தப் புது சூழலுக்குப் பழக்கிக் கொண்டு இரண்டு நாட்களை முடிந்தவரை நன்றாகக் கடப்பதா என்று யோசித்தேன்.
சாப்பிட்டு முடித்ததும் வெளியே வந்து அமர்ந்தேன். இரண்டு பையன்கள் இருந்தார்கள். பேசத் தொடங்கினோம். எது எல்லாம் எரிச்சல் தரும்படி அங்கு இருந்ததோ, அதைப்பற்றி எல்லாம் சிரித்துப் பேசினோம். எப்படி இங்கே வந்தோம் என்று ஒவ்வொருவரும் சொன்னோம். டீ முறுக்கு வாங்கி வந்தார்கள். பகிர்ந்து உண்டோம். மாஸ்க் போட்டுத் தள்ளித் தள்ளி அமர்ந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தோம்.
மனசு லேசானது. இரவு உணவும் சேர்ந்து உண்டோம். உணவு அவ்வளவு நன்றாக இருந்தது. அதைப் பற்றிப் பேசினோம். நல்ல வேளை, அவ்வளவா இங்கே வெக்கை இல்லை என்று ஆறுதல் பகிர்ந்தோம். பாத்ரூம் பரிதாபங்கள் பற்றிப் பேசிச் சிரித்தோம். அந்த இடமே ஒரு சுற்றுலா வந்த பயணிகளாட்டம் காட்சி அளித்தது. நம்ம உயிருக்குலாம் உத்திரவாதம் இருக்கா என்று கேட்டுச் சிரித்தோம். அங்கே ஒரு காது கேட்காத வாய் பேசமுடியாத ஆள் ஒருத்தர் இருந்தார். அவர் அலைபேசியில் அடிக்கடி சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு நாளை இப்படியாகக் கழித்துவிட்டு, எலும்புக்கூட்டின் துணையோடு தூங்கி எழுந்தேன். நேற்று காலை ரிசல்ட் வந்தது. நெகடிவ் என்றானதும் என்னைக் கிளம்பச் சொல்லிவிட்டார்கள். அலைபேசி எண்கள் வாங்கிக் கொண்டோம். நான் சண்டைபோட்டும் எனக்கு உதவிய போலீஸிடம் நன்றி கூறினேன். ‘எப்போ என்ன பிரச்சனைனாலும் கால் பண்ணுங்க’ என்றார். விடை பெற்றுக் கொண்டேன். மனதோடு வித்தியாசமான அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
இப்படி எதிர்பாராத சில திருப்பங்கள் நமக்கு எரிச்சலூட்டும்போது, சற்று நம்மை நாமே நிதானித்துக் கொண்டால் போதும் போல. சிறந்த அனுபவங்களைப் போகிற போக்கில் அனுபவித்துவிடலாம். கொட்டிக் கொடுத்தாலும் திகில் கலந்த, இரண்டு நாள் குளிக்காமல் சமாளித்த, எரிச்சலில் தொடங்கி நிறைவில் முடிந்த இப்படியான மறக்கமுடியாத அனுபவம் எனக்கு நிச்சயம் கிடைத்திருக்காதுதான்.