தேனியில் மட்டும் அதிமுக வென்றுள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தேனியில் மட்டும் தப்பித்த அதிமுக! ஓபிஎஸ் மகன் ஜெயித்தது எப்படி தெரியுமா?
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவியது. ஆனால் தேனியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 504813 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 428120 பெற்று தோல்வி அடைந்தார்.
தமிழகம் முழுவதும் திமுக எளிதாக வென்ற நிலையில் தேனியில் மட்டும் ஓபிஎஸ் மகன் வென்றது எப்படி என்கிற கேள்வி எழுந்தது. இது குறித்து விசாரித்த போது ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமாரின் தேர்தல் வியூகம் தான் காரணம் என்கிறார்கள். தேனியில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டதுமே ரவீந்திரநாத் குமார் உற்சாகம் அடைந்துவிட்டார்.
காரணம் இளங்கோவன் கட்சிக்காரர்கள் செலவுக்கு கூட காசு கொடுக்கமாட்டார் என்று ஒரு பேச்சு உண்டு. இதனை பயன்படுத்திக் கொண்டு சரியானசெலவு செய்து இளங்கோவனை வீழ்த்தியுள்ளார் ரவீந்திரநாத் குமார். மேலும் தேனியில் முக்குலத்தோர் தான் வாக்கு வங்கி. அங்கு கொண்டு போய் நாயுடுவான இளங்கோவனை நிறுத்தியதால் பெரிய அளவில் அவரால் வாக்குகளை பெற முடியவில்லை.
இதே போல் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை இளங்கோவன் அனுசரித்து செல்லவில்லை என்கிறார்கள். அதாவது அவர்கள் செலவுக்கு தேவையான தொகையை சரியாக கொடுக்கவில்லை என்கிறார்கள். இதனால்அவர்களும் இளங்கோவன் வெற்றிக்கு பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை.
இந்த காரணங்களுடன் கடைசி நேரத்தில் பாய்ந்த வைட்டமின் ப வும் சேர்ந்து ஓபிஎஸ் மகனை வெல்ல வைத்துள்ளது.