இந்தியாவில் தமிழ் பேசுவது எத்தனை சதவிகிதம்? இந்தி திணிப்பு இதனால்தானா?

அமித்ஷா இந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது, இந்தி பேசாத மாநிலங்களுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்திருக்கிறது. ஏனென்றால், பெரும்பான்மையை கையில் வைத்திருக்கும் மோடி அரசு, இனி இந்தித் திணிப்பை தைரியமாக மேற்கொள்ளும்.


மேலும், தமிழகத்தில் பா.ஜக.வுக்கு ஜால்ரா போடும் அரசுதான் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என்று சொன்ன தமிழக அரசு, அதனை சத்தமின்றி பின்பற்றியது போன்று, இதனையும் பின்பற்றவே வாய்ப்பு அதிகம்.

இந்த நிலையில், இந்தியாவில் மொழிவாரி பேசப்படும் மக்களின் சதவிகிதம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நாட்டில் இந்தி மொழியை பேசுவோர் 43.63 சதவிகிதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தொகையில் 60 சதவிகிதம் பேர் மட்டுமே இந்தி மொழியை பேசுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்களில் 26.6 சதவிகிதம் பேர் மட்டுமே இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

போஜ்பூரி, ராஜஸ்தானி, சத்தீஸ்கரி, ஹர்யான்வி, மார்வாரி உள்ளிட்ட 26 வட்டார மொழிகளில் இந்தி கலந்து பேசுவோர் 33.4 சதவிகிதம் பேர் என 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.மேலும் இந்தக் கணக்கெடுப்பில் அவாதி, போஜ்பூரி, சத்தீஸ்கரி, மகதி, ஹரியான்வி, மார்வாரி, ராஜஸ்தானி உள்ளிட்ட மொழிகள் இந்தியின் கீழ் கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே தான் இந்தி பேசும் மக்களின் சதவிகிதம் நாட்டில் 43.63 சதவிகிதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழ் பேசுபவர்கள் எண்ணிக்கை 5.7 சதவிகிதம்தான். ஆனால், தெலுங்கு பேசுபவர்கள் எண்ணிக்கை 6.7 சதவிகிதமாகவும், பெங்காலி மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 8 சதவிகிதமாகவும் இருக்கிறது. கன்னடம் பேசுபவர்கள் எண்ணிக்கை 3.6 சதவிகிதமாகவும், மலையாளம் பேசுபவர்கள் எண்ணிக்கை 2.9 சதவிகிதமாகவும் உள்ளது.

ஒரே ஒரு சதவிகிதம் கூட இல்லாத சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு மதிப்பும், மரியாதையும் கொடுத்துவரும் நிலையில், மற்ற அனைத்து பிராந்திய மொழிகளையும் புறக்கணிப்பது ஆபத்தானது.