கோவை: உணவை வீணாக்காமல் சாப்பிடுவோருக்கு கேஷ் பேக் கொடுத்து பாராட்டும் ஓட்டல் பற்றி இந்த செய்தியில் படிக்கலாம்.
உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டால் அசத்தல் கேஷ்பேக்! பிரபல உணவகத்தின் அதிரடி ஆஃபர்! என்ன தெரியுமா?

நவீன உலகில், உணவு பலராலும் வீணடிக்கப்படுகிறது. உணவின்றி பலரும் கஷ்டப்படும் இதே உலகில் உணவை வீணடிப்பது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், கோவை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ராயல் ஹிந்து ரெஸ்டாரண்ட் (ஆர்ஹெச்ஆர்) நிர்வாகத்தினர் கேஷ் பேக் வழங்கி பாராட்டி வருகிறார்கள்.
ஆம். இந்த ஓட்டலின் மேலாளர் ரத்னவேலின் மகன் குருமூர்த்தி இதுபற்றி வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்தான் இத்தகவல் வெளியாகியுள்ளது. 1931ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் இந்த ஓட்டல், சுவையும், தரமும் பற்றி கவனம் செலுத்தும் அதேசமயம், சமூக அக்கறையிலும் தேவையான பங்களிப்பு வழங்க விரும்புகிறது.
அவர் மேலும் கூறுகையில், '' ஓட்டல் தொழிலில், அதிகளவில் உணவு வீணாகும் அவலம் நிகழ்கிறது என்பதால் , அதனை குறைக்கும் வகையில், ஒரு புதிய முயற்சியை செயல்படுத்த விரும்பினோம். உணவை வீணாக்காமல் சாப்பிடும் வாடிக்கையாளருக்கு, கட்டணத்தில், 5 ரூபாய் திருப்பி தருவதாக, அறிவித்தோம். இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால், ஒவ்வொருவரும் உணவு வாங்கும்போதே, வேண்டியதை மட்டும் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். இது எங்களுக்கு மன நிறைவு அளித்துள்ளது. இப்படி செய்வதால், சில வகை உணவுகள் அதிகம் மீதமாகிறது. அவற்றை அப்படியே அரசு மருத்துவமனை, ஆசிரமங்களுக்கு கொடுத்து விடுவோம்,'' என்றார்.
இது ஓட்டல் நடத்தும் அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்ல முயற்சி என்றால் அது மிகையல்ல.