அத்தி வரதர் வரலாறு கூறும் பழைமையான நூல்! ஏகப்பட்ட வரலாற்று பிழைகளுடன் ஒரு அத்தியாயம் - பகுதி 1!

காஞ்சி புரத்தில் இருந்து வெளிவந்துகொண்டு இருந்த காஞ்சி பேசுகிறது என்கிற பத்திரிகை கடந்த 1978 ல் நடந்த அத்தி வரதர் திருவிழாவின் போது அத்தி வரதர் வரலாறு என்று ஒரு சிறு நூலை வெளியிட்டிருக்கிறது.அதை எழுதியவர் புலவர் பெருமாள்.


நூல் 1,காஞ்சிபுரமும் அத்தி கிரியும்,2,அத்திகிரி வரதர் ஆன மகிமை,3,அத்தி வரதர் நீரில் கிடந்த 'மர்மம்'!,4,பிரம்ம யாகத் தீயின் தகிப்போ?.5,அத்திகிரி வரதர் தரிசன விசேடம்.6,அத்திகிரி வரதர் திருப்பாடல்கள் என்று ஆறு அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது.

புத்தகத்தை எழுதிய புலவர் பெருமாள் அவர்களைப் பற்றி ஒரு குறிப்பும் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில்,இவர் காஞ்சி பேசுகிறது என்கிற மாண்பு பெருக்கும் மாத இதழ் ஆசிரியர்,ஸ்ரீ காஞ்சி ஆச்சார்யாள் அவர்களால் ' புராண - இலக்கிய செம்மல் என்றும்,காஞ்சி ஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகளால் 'நுண்கலைச் செல்வர் ' என்றும்,வரலாற்று பேரறிஞர் டாக்டர் மா.ராசமாணிக்கனார் அவர்களால் ' தமிழ் அறிஞர்' என்றும் பாராட்டும் பட்டங்களும் பெற்றவர் என்று சொல்லப்படுகிறது.

இந்துசமயம், கலை,வரலாறு, பண்பாடு பற்றி அரசுத்துறையில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் என்றும்,நூற்றுக்கணக்கான கதை,கட்டுரை, கவிதைகளையும் பல வரலாற்று நூல்களையும் வெளியிட்டு தமிழ்ப்பணி ஆற்றியதாகவும் அந்தக் குறிப்பு சொல்கிறது. அத்தி வரதர் பற்றிய புராணக்கதைகள் பற்றி நமக்கு புகாரில்லை.ஆனால் அவர் சொல்லும் சரித்திரத் தகவல்கள் மிகவும் அபத்தமாக இருக்கின்றன.

அத்திகிரி வரதர் நீரில் கிடந்த மர்மம் என்கிற அத்தியாத்தில் கி.பி 1017 ஆண்டு ' குஜினி'  முகமது காஞ்சிக்கு படை எடுத்து வந்ததாகவும் அதில் காஞ்சி வரதர் சன்நிதி சிற்பங்கள் பாழ்படுத்தப் பட்டதாகவும் சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார் என்கிறார்.இது மிகவும் தவறான தகவல்.இவர் குறிப்பிடும் 1017 ஆண்டில் டெல்லியிலிருந்து 160 மைல் தொலைவில் இருக்கும் தானேசுவரத்தில் இருக்கிறான் கஜினி முகமது.அப்போது தஞ்சையை தலைநகராக கொண்டிருந்த சோழப் பேரரசு புகழின் உச்சியில் இருக்கிறது. ராஜேந்திர சோழன் அதன் சக்கரவர்த்தியாக இருக்கிறான்.இன்னும் சொல்லப்போனால் 1311ல் மதுரைப் பாண்டியர்களின் சகோதரச் சண்டையில் கலந்துகொண்டு நாட்டைக் கைப்பற்றிய அலாவுதீன் கில்ஜிதான் தமிழ் நாட்டுக்குள் நுழைந்த முதல் இஸ்லாமிய அரசன்.இவர் சொல்லும் 1017ல் சோழப்பேரரசு மிக வகிமையாக இருந்தது,கஜினி முகமது மேற்கு கடற்கரையில் இருக்கும் சோமநாத புரத்தை கைப்பற்ற முயன்று கொண்டிருந்த காலகட்டத்தில் ராஜேந்திர சோழனின் படைகள் கிழக்குக் கடற்கரை ஓரமாக கங்கை கரைப் படை எடுப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்தன.