மக்கள் போற்றும் மாமன்னனை அவமதிப்பதா? ரஞ்சித்தை தெறிக்கவிட்ட உயர்நீதிமன்றம்!

மாமன்னர் ராஜராஜ சோழனை அவமதிக்கும் வகையில் பேசிய இயக்குனர் ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


அண்மையில் கும்பகோணம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ரஞ்சித், மாமன்னர் ராஜராஜ சோழனை மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார். ராஜராஜசோழன் காலத்தில் தலித்துகளின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். நான் ஒரு பெண்களை தேவதாசிகளாக ராஜராஜசோழன் மாற்றியதாகவும் ரஞ்சித் தெரிவித்திருந்தார். ரஞ்சித்தின் இந்த பேச்சு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருப்பனந்தாள் நீதிமன்றத்தில் ரஞ்சித்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தான் கைது செய்யப்படக் கூடும் என அஞ்சிய ரஞ்சித் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜராஜ சோழன் குறித்து புத்தகங்களில் இடம் பெற்றுள்ள வரலாற்றுத் தகவலை தான் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. தன்னுடைய பேச்சு தவறாக திரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாகவும் தனக்கு திருப்பனந்தாள் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் இருந்து ஜாமீன் தரவேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் ரஞ்சித்திற்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் நீதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது. அதே சமயம் வரும் 19ம் தேதி வரை ரஞ்சித்தை கைது செய்யப் போவதில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி 19ஆம் தேதி வரை ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்தார்.

அதே சமயம் மக்கள் போற்றும் மாமன்னன் ராஜராஜசோழன் குறித்து ரஞ்சித் கூறிய கருத்துகளுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். தேவதாசி முறை தற்போது ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அதனை தற்போது ரஞ்சித் பேச வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தற்போது அரசுகள் மக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்துவது போல்தான் மன்னர்கள் காலத்தில் மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்ட நீதிபதி தெரிவித்தார். எனவே மக்கள் போற்றும் ஒரு மன்னர் குறித்து அவதூறாக ரஞ்சித் பேசியிருக்கக் கூடாது என்று கோரி வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். கைது செய்ய தடை விதித்து அதே சமயத்தில் ரஞ்சித்திற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளதால் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.