இனிமே நமக்கு மூணு காஷ்மீர்! என்ன செய்யப்போகிறார் மோடி?

தடாலடியாக இப்போது காஷ்மீர் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறார் மோடி.


காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கி விட்டு ஜம்மு, காஷ்மீர், லடாக் என காஷ்மீரை மூன்று பகுதிகளாக பிரிக்க மோடி அரசு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 370-வது பிரிவை நீக்குகிறார்களோ இல்லையோ, சிறப்பு அந்தஸ்தில் உள்ள சட்டப்பிரிவு 35 ஏ- வை ரத்து செய்தாலே சிறப்பு அந்தஸ்து சட்டம் பலவீனமாகி விடும். காரணம் 35 ஏ என்ற சட்டப்பிரிவுதான் காஷ்மீரிகளின் உரிமைகளை ஓரளவு நிலைநாட்டுகிறது.

வெளியார்கள் யாரும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. வேலை வாய்ப்புகளை பெற முடியாது. காஷ்மீரிகளே காஷ்மீரத்தின் நிரந்தர குடிகள் அவர்களே காஷ்மீர் அரசின் சலுகைகளைப் பெற முடியும் என்பது போன்ற சில அற்புதமான உரிமைகளை காஷ்மீர் மக்களுக்கு 35 ஏ வழங்குகிறது.

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் வழங்களையும் வரிகளையும் எடுத்து வளர்ச்சியடையாத பீகார், ராஜஸ்தான், உ.பி போன்ற மாநிலங்களுக்கு வழங்குவதோடு, மருத்துவத்துறையில் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது முன்னேறியிருக்கும் தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளை வட இந்தியர்களுக்கு தாரை வார்த்து வருகிறார்.

மேலும் ரேஷன் சிஸ்டம் நிலம் என சகல உரிமைகளையும் ஓரளவு வளர்ந்த மாநிலங்கள் பறி கொடுத்து வரும் நிலையில், காஷ்மீரில் இதை செயல்படுத்தமுடியாத காரணத்தால் 35 ஏவை ரத்து செய்தால் பானியாக்கள் கைகளுக்குள் காஷ்மீர் சென்று விடும். இது தொடர்பான மசோதாவை விவாதம் இன்றி நிறைவேற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 'வீ சிட்டிசன்' என்ற அமைப்பு இச்சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. காஷ்மீருக்குள் சுமார் முப்பதாயிரம் படைகள் குவிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு கடுமையான பதட்டம் நிலவுகிறது. நாடு எதை நோக்கிச் செல்கிறது சிறுபான்மை மக்கள் இனி இந்தியாவில் வாழும் சூழல் இல்லையா?

இது குறித்து, சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. அதனால், வன்முறை வெடித்துவிடாமல் இருப்பதற்காக ஐம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. தரை, வான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.