30 ஆயிரம் தென்னை மரங்கள் காய்ந்தன! வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்ளும் விவசாயிகள்!

88,540 எக்டரில் சுமார் 2 லட்சம் தென்னை மரங்கள் உள்ளது. பொள்ளாச்சி கிழக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர் வட்டாரத்தில் தென்னை மரங்கள் அதிகமாக இருக்கிறது.


வறட்சியால் சுமார் 30 ஆயிரம் தென்னை மரங்கள் முழுமையாக காய்ந்து விட்டதாக தெரியவந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து விட்டதால், போர்வெல் மூலமாக தண்ணீர் எடுக்க முடியாத நிலையில் தென்னை மரங்கள் காய்ந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால் மண்டபம், கோவில்பாளையம் வட்டாரங்களில் தென்னை மரங்கள் அதிகமாக காய்ந்து விட்டது. கோடை மழை பெய்யாவிட்டால் தென்னை மரங்களுக்கு உயிர் நீர் கிடைப்பது அரிதாகி விடும். கடந்த 3 ஆண்டிற்கு முன் கடும் வறட்சியால் மாவட்ட அளவில், 87 ஆயிரம் தென்னை மரங்கள் முற்றிலும் காய்ந்தது. 

இதில் 46 ஆயிரம் தென்னை மரங்கள் விளைச்சல் இழந்து, வெட்டி அகற்றப்பட்டது. கோவை மாவட்டத்தில் இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் மழை பெய்தது. அதற்கு பிறகு மழை பெய்யவில்லை. தென்னை மரத்திற்கு தினமும் 200 முதல் 250 லிட்டர் தண்ணீர் தேவை. தோப்புகளில் உள்ள தென்னைகளுக்கு சொட்டு நீர் பாசனத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சினால் மட்டுமே வறட்சி பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில பகுதிகளில் தென்னை மரங்களை காப்பாற்ற மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் மூலமாக நீர் கொண்டு சென்று பாய்ச்சும் நிலையிருக்கிறது. வெயில் தாக்கம் அதிகமாகி வருவதால் தென்னை மரங்கள் மேலும் பாதிக்கப்படும் நிலையிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.