மக்களுக்கு கொரோனா அச்சம் போக்க சுகாதார வல்லுநர்கள் கூறிய முத்தான 10 யோசனைகள்...!

தமிழக அரசுக்கு அறிவியல் இயக்கத்தின் சுகாதார வல்லுனர் குழு ஆலோசனை


சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கான சிறப்பு மையங்களும் கொரோனா தொற்றினால் நிரம்பி வருகின்றன. அரசு அளிக்கும் தகவலின் படி அரசின் கோவிட் மருத்துவமனைகளில் மொத்தம்

17,433 படுக்கைகள் உள்ளன. நோய்த் தொற்று அறிகுறியுடன் இருப்பவர்களுக்கும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வசதியில்லாதவர்களுக்கும் படுக்கைகள் காலியில்லை என்று கூறி அனுமதி மறுக்கபடுவதாக மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மூலமாகத் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்நிலையில் கொரோனாவை சமாளிப்பதற்காக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் முக்கியமான 10 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.  

1. அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்ற கோவிட் தொற்று நோயாளிக்கு அந்த குறிப்பிட்ட மருத்துவமனையில் கோவிட் படுக்கைகள் காலியாக இல்லை எனில் எந்த அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியுள்ளது என்பதை அந்த மருத்துவ மனையிலேயே கண்டறிந்து, ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்து அனுப்பிவைக்க வேண்டும். 

2. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு வசதியாக தனியார் மருத்துவ மனைகளில் குறைந்தபட்சம் படுக்கைகளில் 50 விழுக்காட்டை கோவிட் 19 நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

3.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கோவிட் காலிப் படுக்கைகளின் எண்ணிக்கையை தினசரி இணையதளத்தில் வெளியிடவேண்டும். அத்தோடு மக்களுக்கு நேரடியாக உதவி பெற மக்கள் உதவி மையங்களை உருவாக்கித் தர வேண்டும். இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்வது உறுதிப்படுத்தப்படுவதுடன், மக்களிடையே நோய்த்தொற்று குறித்த அச்சத்தைப் போக்கவும் பயன்படும்.

4. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிக்கப்பட்டு வருபவர்களுக்கும் நோய்குறித்த அச்சம் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் வகையில், தரமான மன நல மருத்துவ வல்லுனர்களின் இணையவழி ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். 

5. மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து மருத்துவப் பணியாளர்களையும், தேவையான எண்ணிக்கையில் உடனடியாகப் பணியமர்த்த வேண்டும். நோய்த் தொற்றுப் பணியில் ஈடுபட்டு வரும் முன்னணி சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு உத்திரவாதம் செய்யப்படவேண்டும். அரசு ஏற்கனவே அறிவித்த பணப்பயன்கள் மற்றும் காப்பீடு போன்றவை தாமதம் இன்றி வழங்கப்பட வேண்டும். 

6. பல்வேறு ஆய்வாளர்களும், பொது சுகாதார வல்லுனர்களும் நோயின் தாக்கம் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் தான் உச்சத்தைத் தொடும் என்று கணக்கீடுகள் கூறுகின்றன.  அதற்கேற்ப அச்சப்படத்தக்க வகையில் தினமும் உயர்ந்து வருகிற நோய் தொற்று எண்ணிக்கை கவலையளிக்கிறது. இன்றைய நிலையிலேயே அரசு மருத்துவமனைகளில் இடமில்லை என்ற நிலை உருவாகியுள்ளதை கருத்தில்கொண்டு, பொது சுகாதாரக் கட்டமைப்பை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும். கோவிட்19 படுக்கைகளின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்தவேண்டும். தவறினால் உயிருக்காக போராடும் நிலையில் முற்றிய நிலை அறிகுறிகளோடு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயரும்போது, இறப்பவர் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மருத்துவமனைகளை சென்றடைவதற்கு முன்பே பலர் இறந்துபோகவும் வாய்ப்புள்ளது. எனவே இதனை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்தவேண்டும்.

7. அரசு மருத்துவமனைகளில் கோவிட் நோய்த்தொற்று சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில் கோவிட் 19 அல்லாத பிற மருத்துவ சேவைகளையும் உடனடியாகத் தொடர வேண்டும். இரத்த அழுத்தம், சர்க்கரைவியாதி, தடுப்பூசி சேவை முதலியவற்றை புறக்கணிப்பது, கோவிட் தொற்று இறப்பு எண்ணிக்கை கூடுவதற்கு காரணமாக அமையும். எனவே வயதானவர்களையும், ஏற்கனவே ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பது மிகமுக்கியமான அரசின் கடமையாகும்.

8. தொற்று கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நோய்த் தொற்று உடையவருடன் தொடர்புடைய அறிகுறிகள் உள்ளவர்கள், அறிகுறியில்லாதவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நோய் இருப்பதைக் கண்டறிய பரிசோதனை செய்யவேண்டும். இதன் மூலம் அறிகுறியில்லாத நோய்த் தொற்று இருப்பவர் மூலம் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தாண்டி வெளியே உள்ளவர்களுக்கும் நோய்த்தொற்றுப் பரவாமல் தடுக்கமுடியும். அரசு மருத்துமனைகள் மற்றும் அரசு சார்பாக செய்யப்படும் அனைத்துப் பரிசோதனைகளுக்கும் 24 மணிநேரத்தில், டெஸ்ட் முடிவை முறையாக மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் ஆப் மூலமாக சம்பந்தபட்ட நபருக்குத் தெரிவிக்கவேண்டும். இது தேவையற்ற சந்தேகங்களையும், மன உளச்சலையும் போக்க உதவும்.

9. தமிழ்நாட்டில் இறப்பு எண்ணிக்கை விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருப்பினும் வரும் நாட்களில் நோய்த் தொற்று அதிக எண்ணிக்கையில் உயரும். அதனை ஒட்டி மரண எண்ணிக்கையும் உயரும். இந்நோய்த் தொற்று காலத்தில் ஏற்படும் அனைத்து இறப்புகளையும், அரசு மற்றும் அரசு சார்பற்ற மருத்துவ வல்லுனர்களை உள்ளடக்கிய குழு ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தீரும். அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக மக்கள் நம்பிட வாய்ப்பு ஏற்படும்.

10. தடுப்பூசித் தயாரிப்பற்காக ரூ.700 கோடி செலவில் செங்கல்பட்டு அருகே ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுத்துறை தடுப்பூசிப் பூங்கா,கோவிட் உட்பட பல தடுப்பூசி மருந்துகளைத் தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கு தேவையான கூடுதல் தொகையான ரூ.250 கோடியை உடனடியாக அந்நிறுவனத்திற்கு அளிக்கவேண்டும்.