மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இறுதி எச்சரிக்கை..! சங்கத்தை எடப்பாடி உடைச்சிட்டார்.! ஸ்டாலின் கை கொடுப்பாரா..?

இன்றைக்குள் மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்கள் பணி இடங்கள் காலி என்று அறிவிக்கப்படும். அந்த இடத்துக்கு உடனடியாக புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.


பணிக்கு வராத 50 பேர் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி மொத்தமே 3,127 பேர் மட்டுமே பணிக்கு வரவில்லை என்று புள்ளிவிபரம் கொடுத்துள்ளார் அமைச்சர். 

மருத்துவர்கள் வாசலை அடைத்துக்கொண்டு போராட்டம் நடத்துவது பெரும் வேதனை அளிப்பதாக அமைச்சர் சொல்லிவருகிறார். அதே நேரம் யாருக்கும் இடைஞ்சலாக நாங்கள் போராடம் நடத்தவில்லை, மருத்துவமனைக்கு வெளியில் மழையில் நனைந்துகொண்டுகூட போராட தயார் என்கிறார்கள் மருத்துவர்கள்.

போராட்டம் நடத்தியதில் ஒரு சங்கத்தை மட்டும் அழைத்து அவர்களை சமாதானப்படுத்திவிட்டார்கள். அதனால் இப்போது போராடுவது அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கம் என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடியார் மருத்துவ போராட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு முடியும் வரை ஆகின்ற செலவு ஒரு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரத்து 500. அப்படி பார்த்தால் ரூ. 67 ஆயிரத்து 500 ரூபாய் தான் மருத்துவ கல்விக் கட்டணமாக மாணவர்கள் செலுத்துகிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் 1.24 கோடி ரூபாய் செலவழிக்கிறது. அத்தனையுமே மக்களுடைய வரிப்பணம்.

இப்படி வரிப்பணத்தில் இருந்து ரூ.1.24 கோடி ரூபாய் செலவு செய்து அவர்களை மருத்துவ படிப்பு படிக்க வைக்கிறோம். ஆனால் அவர்கள் அந்த மருத்துவ கல்வி கட்டணம் வெறும் ரூ.67 ஆயிரத்து 500 தான் படிப்பு முடியும் வரை செலுத்துகின்றனர். தனியார் மருத்துவ கல்லூரியில் படித்தார்கள் என்றால் ஒரு கோடி ரூபாயில் இருந்து 1.5 கோடி ரூபாய் செலவு செய்து தான் அந்த மருத்துவ கல்லூரியில் பயில முடியும்.

ஆகவே அரசாங்கம் ரூ.1.24 கோடி செலவு செய்கிறது என்றால் அவர்கள் படித்து முடித்த பிறகு அரசு மருத்துவமனையில் சேர்ந்து, சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தான் இவ்வளவு செலவு செய்து அரசு அவர்களுக்கு அந்த மருத்துவ படிப்பை கொடுக்கின்றது. இன்றைக்கு இதர படிப்புகளுக்கு இவ்வளவு செலவு செய்வது இல்லை. அரசுக்கு பல கலைக்கல்லூரிகள் இருந்தாலும் கூட இவ்வளவு பணம் செலவழித்து கல்வி கற்பித்து கொடுப்பதில்லை.

பொதுச்சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் ஒரு மருத்துவ கல்லூரி மாணவருக்கு அதிக அளவில் பணம் செலவு செய்து டாக்டராக உருவாக்குகிறோம். அப்படி உருவாக்கப்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றுகின்றபோது பல்வேறு கோரிக்கைகள் வைக்கிறார்கள். நாங்கள் நிறைவேற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். சில நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை நிறைவேற்றி கொடு என்று சொன்னால் எப்படி நிறைவேற்றுவது என்று கேட்கிறார்?

ஏற்கெனவே ஜாக்டோ ஜியோ போராட்டத்தை இந்த அரசு நசுக்கியுள்ள பாணியிலே, இந்தப் போராட்டதையும் கையாளுகிறார்கள். இதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். ஸ்டாலின் சொல்லிட்டா மட்டும் எடப்பாடி கேட்பாரா என்ன..?