வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமா? எப்படி?

நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ ஆக்சிஜன் இன்றியமையாதது. நாம் சிரிக்கும்போது அந்த ஆக்சிஜன் போதுமான அளவு உடலுக்கும் செல்கிறது. இதனால் உடலில் பல நன்மைகள் உண்டாகிறது. மகிழ்ச்சியை மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருவது சிரிப்பு...


உயர் ரத்த அழுத்தம் தரும் மாரடைப்பைக் காட்டிலும், மகிழ்ச்சிக் குறைவால் வரும் மாரடைப்புகளே அதிகம் எனப் பல ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மாரடைப்பைத் தள்ளிபோடும் விலையில்லா மருந்து, வயிறு குலுங்கவைக்கும் சிரிப்பு! 

இதயத்துடிப்பை சாதாரண நிலைக்கு கொண்டுவர சிரிப்பு உதவுகிறது.  சிரிப்பதால் இரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு மற்றும் இருதய நோய் பாதிப்புகள் வராமல் பாதுகாக்கிறது. வாய்விட்டு சிரிக்கும் போது சிரிப்பு, உங்கள் ஸ்டிரெஸ் ஹார்மோன்களை குறைக்கும்.   

எபிநெஃப்ரின் (Epinephrine), நார்-எபிநெஃப்ரின் (Norepinephrine), கார்டிசால் (Cortisol) ஆகியவை மனஅழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்கள். ஆனால், மனம்விட்டுச் சிரிப்பது அந்த ஹார்மோன்களின் சுரப்பைக் குறைக்கிறதாம். அதனாலேயே, இயல்பாகவே மனஅழுத்தம் குறைகிறதாம்.

சிரிக்கும்பொழுது மூளையில் அதில எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது. சிரிக்கும் பொழுது உடலில் ஜீரணிக்கும் நீர் சுரக்கிறது, இதனால் உணவுகள் எளிதாக ஜீரணமாகிறது.

சிரிப்பு, நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும்; ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; இதயத்தையும் நுரையீரலையும் நல்வழியில் தூண்டும்; பிராண வாயு ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்; தசைகளைத் தளர்வாக்கும்; வலி நீக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஞாபக சக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல்... போன்ற மூளையின் செயல்திறனைக் கூர்மையாக்கும்.