விபத்தில் சிக்கி முதுகு தண்டுவடம் உடைந்தது..! பேரக்குழந்தையை காப்பாற்ற பிச்சை எடுக்கும் தாத்தா - பாட்டி..! சேலம் நெகிழ்ச்சி!

சேலம்: பிச்சை எடுத்து பேரக்குழந்தையை பராமரிப்பதாக, தாத்தா, பாட்டி இருவர் கூறிய தகவல் உருக்கமாக உள்ளது.


சேலம் மாவட்டம், மேட்டூர் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நடராஜ், சரஸ்வதி. இருவரும் 60 வயதை கடந்த நிலையில், இவர்களது கடைசி மகன் லோகநாதன் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டாராம். அந்த விபத்தில் லோகநாதன் மட்டுமின்றி அவர் மனைவி பிரியாவும் உயிரிழக்க, அவர்களின் 5 வயது மகன் மட்டும் முதுகு தண்டுவடம் முறிந்த நிலையில் உயிருக்குப் போராடி வருகிறான்.

அந்த சிறுவனை பராமரிக்க ஆள் இல்லை என்பதால், நடராஜ், சரஸ்வதி இருவரும் தங்களது பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். ஆனால், சிறுவனின் சிகிச்சைக்காக ஏகப்பட்ட செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், சிறுவனின் முதுகு தண்டவட சிகிச்சைக்கும், படிப்பிற்கும், எதிர்காலத்திற்கும் உதவி செய்யும்படி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நடராஜ், சரஸ்வதி தம்பதியினர் நேரில் வந்து மனு அளித்தனர்.  

இதுபற்றி அவர்கள் கூறுகையில், ''எங்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், பெரிய மகனுக்கு குழந்தை ஏதும் இல்லை. அந்த விரக்தியில் அவன் மதுவுக்கு அடிமையாகிவிட்டான். எங்களுக்கு அவன் எந்த உதவியும் செய்வதில்லை. மகள் குடும்பத்தினரும் சரியாகப் பேசுவதில்லை. கடைசி மகன் லோகநாதன் மட்டும்தான் உதவியாக இருந்தான்.

ஆனால், அவனும் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டான். அவனது மகனும் தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளான். எங்களுக்கு உறவினர்கள் யாரும் உதவிகரமாக இல்லை. இதனால், சிறுவனை பராமரிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறோம். அவனது சிகிச்சை செலவுக்காக தினமும் பிச்சை எடுத்து செலவும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதனால், சேலம் ஆட்சியரை சந்தித்து உதவி கேட்டோம்,'' என்றனர்.