ஜெயலலிதா வாக்குறுதியை எடப்பாடி மீறலாமா..? அவுட்சோர்சிங் முறையில் மருத்துவர்கள் நியமனத்துக்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு.

வெளி கொணர்தல் எனப்படும் அவுட்சோர்சிங் முறையில் மருத்துவர்களை நியமிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில், இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழக அரசு ‘வெளிகொணர்தல்’ முறையில் நானூற்று ஐம்பது மருத்துவர்களை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமிக்க உள்ளது. அதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ 40 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் . மூன்று மாதங்களுக்கு மட்டுமே இந்த பணி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. தமிழக அரசின் இப்பணி நியமனம் கடும் கண்டனத்திற்குரியது.

2005ம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள், 2500 மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தார்.அவர்களுக்கு வெறும் ரூபாய் 8000 மட்டுமே மாதாந்திர தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. அம்மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தியது.

அப்போராட்டங்களின் காரணமாக ஜெ.ஜெயலலிதா அவர்கள், 2006 சட்டமன்றத் தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர், இனி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் படமாட்டார்கள் என அன்று வாக்குறுதி அளித்தார். அதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்றது.

 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர், இனி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க படமாட்டார்கள் என வாக்குறுதி அளித்தது.திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த மருத்துவர்களை பணி நிரந்தரமும் செய்தது. 

இன்றைய தமிழக அரசு, மருத்துவர்களை வெளிகொணர்தல் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிப்பது முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ.ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு எதிரானது. `தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ என்ற அமைப்பு இருக்கும் போது, மருத்துவர்களை, மருத்துவ ஊழியர்களை விரைவாக பணி நியமனம் செய்வதற்காகவே ‘மருத்துவப் பணியாளர் பணிநியமன ஆணையம்’ (எம்ஆர்பி) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முறையாக இப்படி ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இதை மாபெரும் சாதனையாகவும் அஇஅதிமுக அரசு கூறிக்கொள்கிறது.

ஆனால், தற்பொழுது, அந்த அமைப்பின் மூலம் மருத்துவர்களை பணி நியமனம் செய்யாமல், வெளி கொணர்தல் முறையில் நியமனம் செய்வது சரியாகாது. இது தமிழக அரசின் அப்பட்டமான மருத்துவர்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது. 

முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, டி.எம்.எஸ். டி.பி.எச். பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்களை விருப்பத்தின் அடிப்படையில் ,மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்ற வேண்டும். பல ஆண்டுகளாக அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிந்து வரும் அவர்களின் பணி அனுபவத்தோடு, அவர்களின் முதுநிலை மருத்துவப் படிப்பின் துறை சார்ந்த அறிவும் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதைவிடுத்து ,புதிய மருத்துவர்களை நேரடியாக மருத்துவக் கல்லூரிகளில் நியமிப்பது சரியல்ல.

எனவே,தமிழக அரசு ,எம்.ஆர்.பி. மூலமாக, நேரடியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசின் வற்புறுத்தலின் அடிப்படையில் வெளி கொணர்தல் முறையில் மருத்துவர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.