கொரோனாவைவிட அரசுகளின் அலட்சியமே கவலைதருகிறது- சாடும் மக்கள் அதிகாரம், 11 யோசனைகளும் முன்வைப்பு!

கொரோனாவை விடப்பெரிதும் கவலையளிக்கக் கூடியது மத்திய மாநில ஆட்சியாளர்களின் அணுகுமுறை, அலட்சியம், அதிகாரத்துவத் திட்டமிடல் ஆகியவையே.


பாஜக கும்பலின் மூடத்தனமான கருத்துக்கள் சகிக்க முடியாததாகவும் நாசம் விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன என்று மக்கள் அதிகாரம் அமைப்பு கடுமையாகச் சாடியுள்ளது. கரோனாவைச் சமாளிப்பதற்கு செய்யவேண்டிய 11 யோசனைகளையும் அது பட்டியலிட்டுள்ளது. 

இது குறித்து அவ்வமைப்பின் பொருளாளர் காளியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: ” சீனாவில் சில ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா கிருமி இப்போது ஐரோப்பாவில், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மட்டுமின்றி அமெரிக்காவிலும் ஈரானிலும் பெருமளவில் பலி வாங்கி வருகிறது.

இந்திய மக்கள் தொகையை ஒப்பிடும்போது இப்போது நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு (அதாவது இப்போதுவரை 158 பேர் - 18.03.2020) வெகு குறைவு, கவலைகொள்ளத் தேவையில்லை என்பதைப் போன்ற கருத்து உருவாக்கப்படுகிறது. கொரோனாவை விடப்பெரிதும் கவலையளிக்கக் கூடியது மத்திய மாநில ஆட்சியாளர்களின் அணுகுமுறை, அலட்சியம், அதிகாரத்துவத் திட்டமிடல் ஆகியவையே.

பாஜக கும்பலின் மூடத்தனமான கருத்துக்கள் சகிக்க முடியாததாகவும் நாசம் விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. இந்தியா மிக மோசமான, மிக மிக பலவீனமான மருத்துவக் கட்டமைப்பையும் ஆகக் குறைவான நிதி ஒதுக்கீடும் கொண்ட நாடு என்பது உலகறிந்த உண்மை. மேலும் சத்துணவுப் பற்றாக்குறை, ரத்தசோகை கொண்ட மக்கள் இந்தியாவில் தான் அதிகம்.

இத்தகைய சூழலில் கொரோனாவை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்றே பல வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருக்குமென்று வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். இந்தியாவைவிடப் பலமடங்கு மருத்துவக் கட்டமைப்பும், பொருளாதார வலிமையும் கொண்ட பிரிட்டன் தற்போது வெளியிட்டிருக்கும் பாதிப்பு எண்ணிக்கை உண்மை நிலையை விட குறைவானதே என வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.

எனவே இந்தியாவில் பாதிப்பின் உண்மை நிலவரம் வெளிப்படையாக இல்லை. இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களைக் கண்டறிவது தான் முதல்படி. ஆனால் கண்டறியும் சோதனை வசதி மிகக்குறைவாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு பத்துலட்சம் பேரில் தாய்லாந்தில் 120 பேரும், வியட்நாமில் 40 பேரும் சோதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தியாவில் 10 பேர் மட்டுமே சோதிக்கப்படுகின்றனர்.

தற்போது கேரள அரசு மட்டுமே நம்பிக்கையளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் அதிகத்தொடர்புள்ள தமிழகத்தில் வெறும் 4 சோதனை மையங்களே ஏற்படுத்தப்பட்டுள்ளன. வடமாநிலங்களின் நிலைமை சொல்லத்தேவையில்லை. இந்தியா முழுவதும் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள் ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன. அதேபோல் வெண்டிலேட்டர்களும் மிகக்குறைவே. நிலைமையை எதிர்கொள்ள இவை போதா.

இந்தியாவில் அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டு வாழ்பவர்களே 80%-க்கும் மேற்பட்டோர். இவர்கள் அனைவரையும் குறிப்பிட்ட காலம் முடக்கி வைக்க வேண்டுமானால் அதற்குரிய அவசர ஏற்பாடுகள் தேவை.

சீனா தற்போது முழுவதுமாக கட்டுப்படுத்தி விட்டது. சீனா இதனை எதிர்கொண்ட விதத்தையும், நடவடிக்கைகளின் வேகத்தையும் உலகே வியந்து பாராட்டுகிறது. சீனாவிடமிருந்து சமூக ஈடுபாடு உள்ளிட்ட அனைத்தையும் கற்றுக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அதிகாரத்துவ திட்டமிடலைக் கைவிட்டு தொற்றுநோய், மருத்துவ வல்லுனர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழு மாநில அளவில் உருவாக்கப்படவேண்டும். கிராமங்கள் வரை மக்கள் குழுக்கள் உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முதியவர்கள், அன்றாடம் கூலி வேலை செய்வோர் அனைவருக்கும் தனிமையிலிருக்கும் காலம் வரை (ISOLATION PERIOD) தேவையானவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.

சோதனை மையங்கள் அதிக அளவில் திறக்கப்பட்டு முற்றிலும் இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.எந்த அளவு அதிகமாக சோதனைகள் மேற்கொள்ள முடியுமோ, அந்த அளவு பரவலாக மேற்கொள்ள வேண்டும். நோய் கண்டறியப்பட்டோரை அரசு மருத்துவமனைகளில் ஒரு பகுதியில் வைக்காமல் தனி இடத்தில் வைக்க வேண்டும்.

மத விழாக்கள், இறப்பு நிகழ்ச்சி தவிர்த்த பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். உ.பி அரசு ராமநவமி கொண்டாடும் திட்டத்தை உடனே தடுக்கவேண்டும். தேவையான மருத்துவக் கருவிகள், மருந்துகள் போதுமான அளவு திரட்டப்பட வேண்டும்.  சிறுதொழில்,கிராமப்புற மக்களின் நுண்கடன்கள் உட்பட அனைத்தையும் நிலைமை சீராகும் வரை தள்ளி வைக்க வேண்டும்.

பெரும் பகுதி உழைக்கும் மக்கள் மிகக் குறுகிய இடத்தில் வசிக்கின்றனர். இவ்வாறான இடங்களில் போதுமான அளவு விலகி இருக்க வாய்ப்பில்லை. கைவிடப்பட்ட கட்டிடங்கள், பள்ளி கல்லூரிகளைத் தனிமைப்படுத்தப் பயன்படுத்தலாம்.

அரசுகள் நிதி ஒதுக்குவதில் எந்த தடையையும் ஏற்படுத்தக்கூடாது. தொலைக்காட்சி, வானொலிகளில் போதிய அறிவுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட வேண்டும். மூடத்தனமான கருத்துக்களைத் தடுக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இது அனைவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டிய பேரிடர். அதற்கு சமூக ஈடுபாடும், அக்கறையும், மக்கள் மீது பற்றும் மிக முக்கியம். “ என்று காளியப்பனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.