மருத்துவர்களை பழி வாங்கும் அரசு..! வேலையை விட மருத்துவர்கள் முடிவு...! அரசு மருத்துவமனைகளை இழுத்து மூடப் போறாங்களா..?

மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம் என்று அரசு மார் தட்டுகிறது. அதனால் இப்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஏராளமான மருத்துவர்களை கட்டாய பணி மாறுதல் செய்துள்ளனர்.


அப்படி பணி மாறுதல் செய்யப்பட்ட பலரும் புதிய இடத்தில் சென்று வேலை செய்ய விரும்பவில்லை என்பதுதான் அதிர்ச்சித் தகவல். அதைவிட, அரசுப் பணியில் இருந்து விலகிவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலை தொடந்தால் இது உண்மையில் மருத்துவ துறைக்கும், மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பு. 

ஏனென்றால் அரசுப்பணியில் மிக நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கும் மருத்துவர்கள் மட்டுமே ஊதியத்திற்காக போராடுவார்கள், ஏனென்றால் அவர்கள் அரசுப்பணி ஊதியத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளிலும், தங்களது சொந்த கிளினிக்கிலும் பெரும்பாலான நேரங்களை செலவிட்டு அரசுப் பணிக்கு கேஷுவலாக வந்து செல்லும் மருத்துவர்கள் நிச்சயம் அரசாங்க ஊதியத்தை நம்பியிருக்க மாட்டார்கள், அதைப்பற்றி கவலையும் பட மாட்டார்கள்.

அரசாங்க பணியில் முழுமையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் இருந்த மருத்துவர்கள் தங்களது பணியிடங்களில் இருந்து எங்கோ ஒரு மூலைக்கு தூக்கி அடிக்கப்பட்டு இருக்கின்றனர், அப்படிப்பட்ட நேர்மையான மருத்துவர்களை நிச்சயம் அந்த மருத்துவமனையும், அதை சார்ந்த மக்களும் இழந்திருக்கின்றனர்.

பொது மருத்துவத்துறை உண்மையில் ஒரு மிகப்பெரிய சீரழிவின் விளிம்பில் நிற்கிறது, மக்கள் அனைவரும் இந்த பணி மாறுதலுக்கு எதிராக நிற்காவிட்டால் இழப்பு உண்மையில் மக்களுக்குத்தான். ஆம், அனுபவ மருத்துவர்கள் சென்றுவிட்டால், அந்த இடத்தில்புதிய மருத்துவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள். அதனால் மருத்துவத் தரம் குறையும், பின்னர் மருத்துவமனையை இழுத்து மூட வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.