யார் இவர்கள்? நாளுக்கு நாள் தங்கம் விலை ஏற காரணமே இவர்கள் தான்! எப்படி தெரியுமா?

சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வருவதற்கு மற்ற நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள்தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


நம் நாட்டில் ரிசர்வ் வங்கி போலவே மற்ற நாடுகளின் ரிசர்வ் வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவிப்பதால் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி, சீனாவின் மக்கள் வங்கி, பேங்க் ஆஃப் ரஷ்யா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் ரிபப்ளிக் ஆஃப் துருக்கி போன்ற பல நாடுகளின் மத்திய வங்கிகளும் இனி வரும் காலங்களில் தங்கத்தை அதிகமாக வாங்க வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கிக் குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகின் மொத்த தங்க கொள்முதலில் 10% பல நாட்டு மத்திய வங்கிகள் தான் வாங்கி உள்ளதாகவும் தெரிவிக்கிறது அந்த அறிக்கை. பொருளாதாரத்தில் கரன்ஸி ஒரு நிலையற்ற தன்மையிலேயே வர்த்தகமாகி வருவதால் துருக்கி, கஜகஸ்தான், சீனா போன்ற வளரும் நாடுகள் தங்களின் முதலீடுகளை பன்முகத் தன்மை உடன் மாற்றிக் கொள்ள தங்கம் உதவும் என தெரிவித்துள்ளன.

அந்த நாடுகளின் மத்திய வங்கிகள் சுமார் 650 டன் வரை தங்கத்தை வாங்கவும் வாய்ப்பு உள்ளது. 2013-ம் ஆண்டு தங்கம் விலை உச்சத்தை தொட்டது போலவே தற்போது மீண்டும் தொட்டு உள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்வதை மத்திய வங்கிகள் குறைத்து கொள்ளாததால் தங்கம் விலையும் நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே உள்ளது. பொருளாதாரத்தில் வளர்ச்சி சரிவு, வர்த்தகப் போர், அமெரிக்க டாலரில் இருக்கும் பணத்தை தங்கத்துக்கு முதலீடு செய்து ரிஸ்கை குறைத்து, லாபம் பார்க்க எடுக்கும் முடிவு தங்க விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  

2வது பெரிய பொருளாதாரமான சீனாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்புகளில் 3% மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்துள்ளது.. சீனாவிடம் தற்போது 1,936 டன் தங்கம் இருப்பதாகவும் மேலும் அதிகம் தங்கம் வாங்கி பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டின் முதல் அரை ஆண்டில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் 375 டன் தங்கம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இனி வரும் மாதங்களிலும் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்ட உள்ளதாக உலக மத்திய வங்கிகளே சொல்லி உள்ளதால் அடுத்த 12 மாதங்களில் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என்றே கூறலாம்.

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ஆகஸ்ட் 26, 2019 அன்று 40,560 ரூபாய்க்கு விற்பனையானது.. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 26, 2019 அன்று 37,180 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. இது இரண்டுமே கடந்த சில வருடங்களில் இல்லாத புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.