ஜெ.அன்பழகனுக்கு கெட் அவுட்..? ஏன்... எதற்கு எடப்பாடி சட்டமன்றத்தில் டென்ஷன் பதில்!

அமைச்சர் வேலுமணியை ஒருமையில் திட்டியதாக இன்று தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகன் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


இதுகுறித்து, இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அளித்த விளக்கம் இது. மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்களும், மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் அவர்களும் பல்வேறு சமயங்களிலே விளக்கம் கேட்டு பேசினார்கள். அதை எல்லாம் அனுமதித்து இருக்கின்றோம்.

அதை எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் இங்கே இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களில் ஒரே ஒருவர் தான் பிரச்சனைக்குரியவர். அவர் தான் மரியாதைக்குரிய உறுப்பினர் ஜெ. அன்பழகன் அவர்கள். எப்பொழுது அவையில் பேசினாலும், அவர் சொல்லுகின்ற கருத்திற்கு தான் பிரச்சனையே உருவாகிறது. இது அனைவருக்கும் தெரியும். தெரியாதது ஒன்றுமே கிடையாது.

இங்கே இருக்கின்ற மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே, வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான தகவலை தெரிவித்துக் கொண்டு இருக்கிறார் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். அது இப்பொழுது நிஜமாகிவிட்டது. நான் ஏற்கனவே சொன்னேன். கவர்னர் உரை மீது பேசியிருந்தால் எந்த பிரச்சனையும் கிடையாது.

அதற்கு மீறி பேசும் போது தான் இந்த பிரச்சனையே உருவாகின்றது. அவர் தனிப்பட்ட முறையிலே மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சரை விமர்சனம் செய்யும் போது தான் இந்த பிரச்சனையே உருவாகின்றது. அவர் நேரடியாக குறிப்பிட்ட காரணத்தினால் தான், அவர் எழுந்து பேசினார். யாராக இருந்தாலும் உணர்ச்சிகள் உண்டு.

அந்த உணர்ச்சியின் அடிப்படையில் தான் எழுந்தாரே தவிர வேறு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆகவே, கவர்னர் உரையிலே பேசியிருந்தால் எந்த பிரச்சனையும் எழுந்திருக்காது. ஆகவே, நீங்கள் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு மறுப்பு கருத்தை ஆளுங்கட்சியிலிருந்தும் சொல்லப்படுகிறது.

அந்த உண்மைநிலை தெரிந்து அடுத்த தலைப்பிற்கு போனால் சரியாக இருக்கும். அதையே திருப்பி திருப்பி பேசி, பிரச்சனையை உருவாக்கி, அவை சுமூகமாக நடைபெற்று கொண்டு இருக்கின்ற சூழ்நிலையை மாற்றி திசைதிருப்ப பார்க்கிறார் என்பது தான் என்னுடைய கருத்து என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். 

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொல்லுகின்ற போது கூட, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டார் என்று தெரிவித்தார். தனிப்பட்ட முறையிலே விமர்சனம் செய்கின்ற போதுதான் பிரச்சனையே வருகின்றது. பொதுவான பிரச்சனைகளை சொல்லுகின்ற போது யாருக்கும் எந்தவித உணர்வும் ஏற்படாது. தனிப்பட்ட முறையிலே அவர்கள் குற்றத்தை சாற்றுகின்ற போது,

யாராக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அது வரத்தான் செய்யும். ஆகவே, அதை தவிர்த்துவிட்டு, அதற்கு ஏற்றவாறு அவையினுடைய மரபை கடைப்பிடித்து பேசினால் இந்த பிரச்சனை எழாது என்று தெரிவித்து இருக்கிறார்.