கடவுள் நம்பிக்கை இல்லாதவரே வெற்றியாளராக இருக்கிறார்! இது ஆய்வு சொல்லும் முடிவுங்க!

வாழ்க்கையில் எந்த பிரச்னை வந்தாலும் கடவுள் நம்பிக்கை இருந்தால், அதை வெற்றிபெற்று நிம்மதியாக இருக்கலாம் என்று சொல்வார்கள்.


ஆனால், உண்மையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே பிரச்னைகளைத் தாங்கும் வெற்றியாளர்களாக இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 2010ம் ஆண்டு டியூக் பல்கலைக்கழகம் ஆய்வொன்றை மேற்கொண்டது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் இனவெறிக்கு ஆளாவதில்லை. சக மாணவர்களின் தீய பழக்கங்களால் கெட்டுப் போவதில்லை. மனதில் வஞ்சம் வைப்பதில்லை. தேசிய வெறிக்கு ஆட்படுவதில்லை.

போர் வெறியர்களாக இருக்கமாட்டார்கள்.அதிகாரத்துவப் போக்கு அவர்களிடம் வராது. சகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. கடவுள் நம்பிக்கையோடு வளர்க்கப்படும் குழந்தைகளைக் காட்டிலும் நம்பிக்கையில்லாதவர்களாக வளர்க்கப்படும் குழந்தைகள் பல அம்சங்களிலும் சிறந்தவர்கள் ஆகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் மதமற்றவர்களின் எண்ணிக்கை 23 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. 1950களில் அமெரிக்காவில் மதமில்லாதவர்களின் எண்ணிக்கை வெறும் 4 விழுக்காடு மட்டுமே. கடவுள் இல்லை என்ற போக்கு அதிகரித்து வருவதால், மதமில்லாதவகையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதுபற்றி ஆய்வாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

மதம் அளிக்கின்ற பாதுகாப்பும் தர்ம சிந்தனையும் இல்லையென்றால் செயலற்றவர்களாக, நம்பிக்கையிழந்தவர்களாக, நோக்கமற்றுத் திரிபவர்களாக ஆகிப்போவார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால் அது அப்படி இல்லை. மதமற்ற குடும்பங்கள் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த அடித்தளத்தை உருவாக்கித் தருகிறார்கள். இதனைப் பேராசிரியர் வார்ன் பெங்ஸ்டன் உறுதி செய்கிறார். வார்ன் பெங்ஸ்டன் பல தலை முறைகளின் மாற்றம் பற்றிய நீண்டகால ஆய்வினை மேற்பார்வை செய்பவராவார்.

இந்த ஆய்வுதான் அமெரிக்கத் தலைமுறைகள் பற்றிய மிகப் பெரிய ஆய்வாகும். மத நம்பிக்கையற்ற குடும்பங்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்து வருவதைக் கண்ட பெங்ஸ்டன், 2013ல் மதச்சார்பற்ற குடும்பங்கள் என்ற அம்சத்தையும் ஆய்வில் இணைத்தார். “மத நம்பிக்கையுள்ள பெற்றோர்களைக்காட்டிலும் மத நம்பிக்கையில்லாத பெற்றோர்கள் தங்களின் நேர்மை-, தர்மம் பற்றிய கொள்கையில் இழை பிசகாதவர்களாக இருக்கிறார்கள்” என்று பென்ஸ்டன், ஜுகர்மேனிடம் தெரிவித்தார்.

“மதச்சார்பற்ற குடும்பங்களின் பெரும் பகுதியினர் ஒரு நோக்கத்துடன் கூடிய வாழ்க்கையை நடத்துகின்றனர். அவர்களின் இலக்குகள் தெளிவாக இருக்கின்றன. அவர்கள் நன்னெறி உணர்வுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்” என்றும் அவர் சொன்னார். மதநம்பிக்கையற்றவர்களுக்கு நன்னெறி என்பது மிகவும் எளிய கோட்பாடு. மற்றவர்களைப் புரிந்துகொண்டு அதற்கு இணங்க செயல்படு என்பதுதான் அந்தக் கோட்பாடு.

மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதனையே நீ அவர்களுக்குச் செய் என்பது எல்லாக் காலத்துக்குமான கோட்பாடாகும். அதற்கு அதீதச் சக்தி ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை தேவையானதாக இல்லை. அப்புறம் மற்றொரு ஆச்சரியமான செய்தியைக் கேளுங்கள். “அமெரிக்கச் சிறைகளில் உள்ளவர்களில் நாத்திகர்கள் அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

1990களுக்குப் பின்னர் சிறைப்பட்ட நாத்திகர்கள் அநேகமாக இல்லை” என்று அமெரிக்க மத்திய அரசின் சிறைத்துறை தெரிவிக்கிறது. இதே விஷயத்தைத்தான், கடந்த ஒரு நூற்றாண்டுக் குற்றவியல் ஆவணங்களும் காட்டுகின்றன என்று, ஜுகர்மேன் சொல்கிறார். “எந்த மதத்தையும் சாராதவர்கள் அல்லது மதத்தொடர்பு இல்லாதவர்கள் குற்றம் செய்தவர்களின் பட்டியலில் மிகக் குறைவாகத்தான் காணப்படுகிறார்கள்” என்றார் அவர்.

அதனால் கடவுளை நம்புவதைவிட உங்களையே நம்புங்களேன்.