டெல்லி: போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
முழு போதை..! நண்பர்களுடன் ட்ரிபிள் ரைடு..! அதிவேகத்தில் சென்ற பைக் சாலையில் மறைந்த விபரீதம்! நம்பினால் நம்புங்கள்..!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது இன்றைய அவசர உலகில் இயல்பான நிகழ்வாக மாற தொடங்கிவிட்டது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் மதுவின் தீமையை சுட்டிக்காட்டும் வகையிலான ஒரு வீடியோ பகிரப்படுகிறது. அந்த வீடியோவில், ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் பகுதியில் பைக் ஒன்றில் 3 இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்தபடி மிக வேகமாகச் செல்கின்றனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் வாகன போக்குவரத்து குறைவாக உள்ளது. இருந்தாலும், அந்த இளைஞர்கள் தட்டுத்தடுமாறி பைக் ஒட்டுகின்றனர். கார்களை எல்லாம் ஓவர்டேக் செய்து, சாலை விதிமுறைகளை மறந்து, தாறுமாறாக அவர்கள் செல்வதால், மற்றவர்கள் அச்சமடைந்து வழிவிடுகின்றனர். சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த அவர்களின் பைக், சாலை தடுப்பில் இடித்து எதிர்ப்புறம் உள்ள மற்றொரு சாலையில் ஊடுருவி கீழே விழுகிறது.
இந்த இளைஞர்களை பின்னால் துரத்தியபடி காரில் சென்று ஒருவர் படம்பிடித்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கும்போது பைக்கில் செல்லும் இளைஞர்கள் திடீரென மாயமாவதைப் போல தோன்றுகிறது. உற்று கவனித்தால் அவர்கள், சாலை தடுப்பை கடந்து, எதிர்ப்புற சாலையில் விழுவதைக் காண முடிகிறது. இது மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு தக்க பாடம் புகட்டுவதாக உள்ளது. இதைப் பார்த்தாவது அத்தகைய நபர்கள் திருந்துவார்களா என்பதே நம் எதிர்பார்ப்பு...