ரேசன் கடையில் இலவச மாஸ்க்.... ஸ்டாலின் சொல்வது வடிகட்டிய பொய்... போட்டுத்தாக்கும் எடப்பாடி பழனிசாமி

இந்தியாவிலேயே அதிக வென்டிலெட்டர்கள் தமிழகத்தில்தான் இருக்கின்றன.


அதனால் வென்டிலேட்டர் தட்டுப்பாடு இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்வது வடிகட்டிய பொய் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இப்போது அரசு மருத்துவமனையில் மட்டும் கிட்டத்தட்ட 2800 வென்டிலேட்டர்கள் இருக்கின்றன. இவை தவிர தனியாரிடமும் வென்டிலேட்டர்கள் உள்ளன. அதேபோன்று தமிழகத்தில் 12.50 லட்சம் பி.சி.ஆர். கிட்கள் இருக்கின்றன. தமிழகத்தில்தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு சிறப்பாகவே செயல்படுகிறது என்று எடப்பாடி தெரிவித்தார்.

சென்னை மக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியையும் நன்றாக கடைபிடிக்க வேண்டும். அப்போது மட்டுமே கொரோனா பிரச்னையை சமாளிக்க முடியும். கூட்டம் கூட்டமாக செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். மேலும், கொரோனா விவகாரத்தில் என்னை முன்னிறுத்திக்கொள்வதாக ஸ்டாலின் சொல்வதும் தவறு என்று திட்டவட்டமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் ரேசன் கடையில் விலையில்லா மாஸ்க் கொடுப்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் எடப்பாடி செய்திருக்கும் அறிவிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.