2 இட்லி! ஒரு கப் சாம்பார்! பில் ரூ.150! அதிர வைத்த தஞ்சை ஓட்டல்!

தஞ்சாவூரில் ஓட்டல் ஒன்றில் 2 இட்லிக்கு 150 ரூபாய் மற்றும் ஜி.எஸ்டி. வசூலிப்பதாக வெளியான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. உலக உணவு நாள் கொண்டாடப்படும் இன்று இந்த உணவு சாப்பிட்ட ரசீதை பார்த்து பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இந்த புகைப்படத்தில் தஞ்சாவூரில் உள்ள வ.வு.சி. நகரில் செயல்படும் லட்சுமி ஓட்டலின் விலைப்பட்டியல் என குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு நண்பருடன் சாப்பிடச் சென்ற நபர் ஒருவர் சாப்பிடதற்கான பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் நெய் தோசை 140 ரூபாய், 2 இட்லி 150 ரூபாய், வெங்காய தோசை 140 ரூபாய், பொங்கல் 80 ரூபாய், பழச்சாறு 120 ரூபாய் என மொத்தம் 630 ரூபாய் உள்ளது.

அது மட்டுமின்றி அந்த 630 ரூபாய்க்கு சரக்கு மற்றும் சேவை வரி 32 ரூபாய் போடப்பட்டுள்ளது. இதில் இட்லிக்கான கட்டணத்தைத்தான் பார்த்த வாடிக்கையாளர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. இந்த பில்லை பார்த்த சமூக வலை நண்பர்கள் 150 ரூபாய்க்கு அம்மா உணவகத்தில் 150 இட்லி வாங்கி 30 பேர் தாராளமாக சாப்பிட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலர் 630 ரூபாய்க்கு 2 கிலோ பொன்னி அரிசி, ஒரு கிலோ கோழிகறி, ஒரு கிலோ மத்தி மீனு, 8 முட்டை, 100 ரூபாய்க்கு மசாலா பொருட்கள், 8 வாழைப்பழம் வாங்கி எட்டு பேரு சாப்பிட்டுருக்கலாம் என்று கூறியுள்ளனர்.