வாக்கு எந்திர பட்டனில் வாசனை திரவியம்! யாருக்கு வாக்கு என கண்டறிய செம ஐடியா!

வாக்குப் பதிவு எந்திரங்களில் தங்கள் கட்சிக்கான பொத்தான் மீது வாசனைத் சென்டை தெளித்தாக திரிணாமுல் கட்சியினர் மீது புகார் எழுந்துள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொருவரும் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆர்வத்துடன் இருக்கின்றன. இந்த கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் புதிய முயற்சியாக வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அறிய நூதன முயற்சி மேற்கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

மேற்குவங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தில் இரு தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்க முதலில் சென்ற திரிணாமுல்  நிர்வாகி ஒருவர் வாக்கு எந்திரத்தில் தங்கள் கட்சியின் சின்னத்திற்கு அருகே உள்ள பட்டனில் வாசனை திரவியத்தை தடவியுள்ளார்.

அதன் பிறகு வாக்களித்துவிட்டு வந்தவர்களின் விரலை முகர்ந்து பார்த்து வாசனை இருந்தால் விட்டுவிட்டதாகவும் வாசனை இல்லை என்றால் திரிணாமுலுக்கு வாக்களிக்கவில்லை என்று தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதே போல் சீரான இடைவெளியில் உள்ளே செல்லும் திரிணாமுல் தொண்டர்கள் தங்கள் கட்சி சின்ன பட்டன் மீது வாசனை திரவியத்தை தடவி வாக்காளர்களை அச்சுறுத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.