கர்நாடக அரசியலும் நம் தமிழ்நாட்டு அரசியல் போன்று தினம் ஒரு பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் அமித்ஷாவுக்கும் கடும் மோதல்…! கட்சி நிலவரம் என்னாகும்?

கர்நாடக அரசியலும் நம் தமிழ்நாட்டு அரசியல் போன்று தினம் ஒரு பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. தான் விரும்பிய மாற்றங்களை கட்சியிலும் ஆட்சியிலும் செய்வதற்கு அமித்ஷா குறுக்கே நிற்பதாக வெளிப்படையாக எடியூரப்பா குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளார்.
இந்தி எதிர்ப்பு விவகாரத்தில் அமித்ஷா மூக்கை உடைத்தவர் எடியூரப்பாதான். கர்நாடகத்தில் கன்னடம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும், இந்திக்கு இங்கே இடம் இல்லை என்று உறுதியாக அவர் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகே அமித்ஷா இறங்கிவர வேண்டியதானது.
அதேபோன்று சமீபத்தில் நடந்த பெங்களூரு மேயர் பதவி தேர்தலுக்கு, எடியூரப்பா ஒருவரை சிபாரிசு செய்தார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான அமித் ஷா, அவரை நிராகரித்துவிட்டு வேறொருவரை நிறுத்திவிட்டார். அவர் வெற்றி அடைந்தும் விட்டார். இதனால் தன்னுடைய பிடி மாநிலத்தில் போய்விடுமே என்று எடியூரப்பா அச்சப்படுகிறார்.
அதேபோன்று பெல்லாரி மாவட்டத்தை இரண்டாக்கி, விஜய நகரம் என புதிய மாவட்டத்தை உருவாக்க முடிவெடுத்தார் எடியூரப்பா. ஆனால், பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த, கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, மாவட்டத்தைப் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமித்ஷாவிடம் முறையிட்டார். உடனே அமித்ஷாவும் இந்த நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவு இட்டாராம்.
தொடர்ந்து மாநில அரசியலில் குடைச்சல் கொடுத்துவருவதால் அமித்ஷா மீது விரைவில் எடியூரப்பா வெளிப்படையாக போர்க்குரல் கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் மத்திய அரசு வரை எதிரொலிக்குமாம். பார்க்கலாம்.