எடப்பாடி எத்தனை கோடி கொண்டுவரப் போறாரோ..? சொக்கா, வைக்க பையில் இடம் இருக்குமோ இல்லையோ?

எடப்பாடியும் அவரது அமைச்சர்களும் வெளிநாடுகளுக்குப் போய் முதலீடுகளை அள்ளிவரப் போயிருக்கிறார்கள். இதோ இன்னும் இரண்டு நாட்களில் அத்தனை பேரும் இந்தியா திரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் எவ்வளவு கொண்டுவரப் போகிறார்களோ என்று தமிழர்கள் அத்தனை பேரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.


இந்த நிலையில் வெளிநாட்டில் போய்த்தான் மூலதனம் திரட்டவேண்டுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன். இதோ அவரது பதிவு. வெளிநாட்டுக்காரன் முதலீடு செய்து தான் தமிழகத்தை உய்விக்கமுடியும் என்பதை ஒரு மூட நம்பிக்கையாகத் தான் நான் பார்க்கிறேன்.

300 கோடிக்கும் மேலான செலவில் 11 அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உட்பட அரசு நிர்வாகிகள் என பெரும் பட்டாளம் வெளிநாடு சென்று பெற்று வரக் கூடிய முதலீட்டால் தமிழகத்தில் எந்த தலைகீழ் மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

அப்படி இங்கு வந்து யாராவது முதலீடு செய்து அதில் ஏதோ சில நூறு பேருக்கு வேலைவாய்ப்பு என்றால், அந்த வேலைவாய்ப்பை பெறுவதற்காக இவ்வளவு செலவு தேவையா? இங்கே தமிழ் நாடோ..., இருக்கும் வேலைவாய்ப்புகளைக் கூட, வடநாட்டு இளைஞர்களைக் கொண்டு பூர்த்தி செய்ய வேண்டிய அவல நிலையில் உள்ளது.

கடந்த எட்டாண்டுகளில் தமிழகத்தில் சுமார் 10 லட்சம் வட இந்திய இளைஞர்கள் வந்து குடியேறி தமிழகத்தின் உழைப்பு சக்தியாக உழன்று கொண்டுள்ளனர். தமிழகத்தின் டாஸ்மாக் பல லட்சம் இளைஞர்களை உயிர்பலி வாங்கியதோடு, மேலும் பல லட்சம் பேரை உடல் வலுவற்ற, நடமாடும் பிணங்களாக மாற்றி வைத்துள்ளது...!

அதாவது, ஒரு நாட்டின் பெருஞ் செல்வமே அதன் மனித ஆற்றல் தான்! அதை கொன்றுவிட்ட பிறகு வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் எதுவுமே அந்த வெற்றிடத்தை நிரப்பிவிடாது.

தமிழ் நாட்டில் முறையாக நீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தாத காரணத்தால், பல லட்சம் சிறு,குறு விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் வேலை இழந்துள்ளனர். இருக்கும் பணத்தையெல்லாம் ஓட்டு பொறுக்கும் இலவச,மற்றும் மானியங்களுக்கு ஊதாரித் தனமாக அள்ளி இறைத்துவிட்டு, வெளி நாட்டில் இருந்து பொறுக்கி வரப்படும் பணத்தால் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றிவிடப் போகிறார்களாம்!

இவர்கள் வெளி நாட்டில் இருந்து முதலீட்டை ஈர்க்கப் போனார்களா.. அல்லது, தாங்கள் முறைகேடாக சேர்த்த செல்வத்தை அங்கே இறக்கப் போனார்களா...? என்றெல்லாம் நான் விவாதிக்க விரும்பவில்லை.

ஆனால், நம் கிராமத்தில் சொல்லும் ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவதாகச் சொன்னானாம்!