ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் தவறவிடப்பட்ட தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த நடத்துநர், ஓட்டுநரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். நகையை ஒப்படைக்கும் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
5 சவரன் தங்கச் சங்கிலி..! பேருந்தில் கேட்பாரற்று கிடந்ததை எடுத்து டிரைவரும் கண்டக்டரும் செய்த நெகிழ்ச்சி செயல்!
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கெட்டவாடியில் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு இருக்கைக்கு கீழே ஒரு தங்கச் சங்கிலி இருப்பதை கவனித்தார் நடத்துநர் மகேஷ். பின்னர் அந்த தங்கச் சங்கிலியை காண்பித்து யாருடையது என கேட்டார். பயணிகள் அனைவரும் தங்களுடைய செயின் இல்லை என பதில் அளித்தனர்.
இதனால் அந்த நகையை தொலைத்த உரிமையாளர் வந்து அடையாளம் சொல்லி வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்தார். இதன் பின்னர்தான் அந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை தவறவிட்டது ஒரு பெண் என்றும் அவர் பெயர் துண்டம்மா என்பதும் தெரியவந்தது. பின்னர் அந்த பெண்ணை வரவழைத்த நடத்துநர் தங்கச்சங்கிலியை ஒப்படைத்தார்.
அந்த பெண்ணிடம் நடத்துநரும், ஓட்டுநரும் தங்கச் சங்கிலி ஒப்படைக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசுப்போக்குவரத்து கழக ஊழியர்களின் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.