தேர்தல் செலவு! விலைபேசப்படும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வைரங்கள்!

ஜெயலலிதா வாங்கி வைத்துள்ள வைரங்களை விற்பனை செய்து தேர்தல் செலவை கவனிக்க ஒரு கட்சி திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்த பணம் பெரும்பாலும் வைரங்களாக மாற்றி வைக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு.

குஜராத்தில் உள்ள மிகப்பெரிய வைர வணிகர் ஒருவர் மூலமாக ஜெயலலிதாவின் பணம் வைரக்கற்கள் ஆக மாற்றப்பட்டு போயஸ் கார்டன் வந்து சேர்ந்ததாக பேச்சுக்கள் அடிபட்டது. இது உண்மைதான் என்கிற ரீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மாற்றப்பட்ட பணத்தின் மூலமாக பெறப்பட்ட வைரங்களை தற்போது விற்பனை செய்து நாடாளுமன்றத் தேர்தலில் செலவு செய்ய ஒரு குடும்பம் திட்டமிட்டுள்ளதாக அந்த புகாரில் பாபு முருகவேல் கூறியுள்ளார்.

வைரங்களை விற்பனை செய்து தேர்தலில் செலவு செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாபு முருகவேல் கூறியுள்ளார். வைரங்களை விற்பனை செய்யும் தகவலை உறுதிப்படுத்திய பாபு முருகவேல் அதனை யார் செய்ய உள்ளார்கள் என்கிற தகவலை வெளிப்படையாகக் கூறவில்லை.

ஆனால் வைரங்களை விற்பனை செய்து அதனை பணமாக மாற்றி தேர்தலில் செலவு செய்ய சசிகலா தரப்பில் தான் முயற்சி செய்கிறார்கள் என்று பாபு முருகவேல் ரகசியமாக கூறிவிட்டுச் சென்றார். கேட்க மர்மக் கதை போல் இருந்தாலும் இதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று தேர்தல் ஆணையம்தான் விசாரித்து கூற வேண்டும்.