பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குரல் கொடுத்து வரும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.
யார் இந்த அசோக் லவசா? தனி ஆளாக மோடி, அமித் ஷாவையே தெறிக்கவிடுபவர்!

பிரதமர் மோடி பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் விதி மீறல் என குறிப்பிட்டுள்ளவற்றை பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அவர்கள் மீது தவறு எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
பாலக்கோடு தாக்குதல், அபிநந்தன், இஸ்லாமியர்கள் குறித்து பேசியவை உட்பட தேர்தல் விதிகளை மீறி பேசியதாக மோடி, அமித் ஷா ஆகியோர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. அவற்றில் மோடி மீது எந்தத் தவறும் இல்லை என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கல் அசோக் லவசா, சுஷில் சந்திரா ஆகியோர் விசாரணை நடத்திய நிலையில் அசோக் லவாசா தவிர மற்ற இருவரும் தவறு இல்லை என முடிவு எடுத்ததால் மெஜாரிட்டியின் அடிப்படையில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மீது தவறு இல்லை என முடிவெடுக்கப்பட்டது.
மோடிக்கு எதிரான 6 வழக்குகளில் 4 வழக்குகளில் மோடிக்கு எதிராகவும், அமித்ஷாவுக்கு எதிராக 6 வழக்குகளிலும் அசோக் லவசா வாக்களித்துள்ளார். அதாவது மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களும் மோடி, அமித் ஷாவுக்கு க்ளீன் சிட் கொடுத்த நிலையில் இல்லை அவர்கள் தவறு செய்துள்ளனர் என தனி ஆளாக கூறி அசர வைத்துள்ளார்.
நாட்டின் பிரதமர், ஆளும் கட்சியின் தலைவர் ஆகியோர் மீது எவ்வித பயமும் இல்லாமல் அசோக் லவசா இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் தற்போது தேசிய அரசியலில் இவர் பெயர் தான் கொடி கட்டிப்பறக்கிறது. 2018-ஆம் ஆண்டில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட அசோக் லவசா 2021ல் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதவிக்காலம் முடிந்த பின் பதவி ஏற்கவுள்ளார்.