போராட்டத்தை தூண்டிவிட்டால்..? ஸ்டாலினுக்கு எடப்பாடி எச்சரிக்கை

ஆரம்ப காலத்தில் பவ்யமாகவும், பதட்டமாகவும் பேசியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இப்போது எகிறியடித்துவருகிறார். இஸ்லாமியர் போராட்டத்துக்கு ஸ்டாலின் ஆதரவு கொடுக்கிறார் என்று எப்படி சட்டமன்றத்தில் கொந்தளித்திருக்கிறார் தெரியுமா?


நீங்கள் பொதுமக்களிடத்திலும், சிறுபான்மையின மக்களிடத்திலும் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி கொண்டே இருக்கின்றீர்கள். எல்லா இடத்திலும் இதைத்தான் பேசி கொண்டு இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட அச்ச உணர்வை ஏற்படுத்துகின்ற காரணத்தினாலே, தொடர்ந்து பேட்டி கொடுக்கின்ற போது எல்லாம், இதைப்பற்றி பேசி கொண்டே இருக்கின்றீர்கள். என்ன சொல்கிறீர்கள்? 

மத்திய அரசிடம் இந்த ஆட்சி பயந்து கொண்டு இருக்கிறது. இல்லை என்றால் சிறைக்கு போய்விடுவார்கள். எந்தக் காலத்திலும் அது நடக்கவே நடக்காது. உங்கள் முன்னாள் அமைச்சர்கள் மீது எவ்வளவு வழக்குகள் இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். எங்கு பேட்டி கொடுத்தாலும் நீங்கள் இதைத்தான் சொல்கிறீர்கள். ஆகவே, உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 

இன்னும் கணக்கெடுப்பே வரவில்லை, வருவதற்கு முன்பே நேற்றையதினம் கூட நீங்கள் ஒரு கூட்டத்திலே பதற்றமான சூழ்நிலை உருவாக்குகின்ற விதத்திலே பேசியிருக்கின்றீர்கள். 1872-லிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பது வாடிக்கையாக இருக்கிறது. அது உங்களுடைய ஆட்சியிலும் நடந்தது. ஏப்ரல் 1 முதல் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் யாருமே அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காதீர்கள், போராட்டம் தொடர வேண்டும், அதற்கு நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறோம் என்று சொல்கிறீர்கள். 

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் இதற்கும் என்ன இருக்கிறது. அவர்கள் என்.பி.ஆர். பற்றி தான் போராடுகிறார்கள். நீங்கள் புதிதாக தூண்டி விடுகிறீர்கள். இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலை வருகின்றபோது, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அதை தணிக்கின்ற விதமாக, சிறுபான்மையின மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையிலே அந்த கருத்தை சொல்லி இருக்கின்றார்.

சட்டமன்றத்திலே தெரிவித்த கருத்தை தான் செய்தியாளர்களுக்கு தெரிவித்து இருக்கின்றார். எந்தவித உரிமை மீறலும் கிடையாது. 2003-ல் நீங்கள் என்.பி.ஆர். சட்டத்தை கொண்டு வந்த காரணத்தினாலே தான் இவ்வளவு பிரச்சனைகளே வந்தது. 2003-ல் மத்திய அரசு என்.பி.ஆர். சட்டத்தை கொண்டு வந்ததன் விளைவு இப்போது நீங்கள் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.

அதில் சில அம்சங்களை சேர்க்கலாம், நீக்கலாம் என்று அந்த சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. அந்த சட்டத்திலே இடம் பெற்றிருக்கின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு மத்திய அரசு மூன்று புதிய அம்சங்களை சேர்த்திருக்கிறார்கள். அதற்கு தான் விளக்கம் கேட்டு இருக்கின்றோம். 

நீங்கள் நிறைவேற்றிய சட்டம். அதாவது, திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்திலே இருக்கின்ற போது கொண்டு வந்த சட்டம். 2010-ல் நீங்கள் கணக்கெடுப்பு செய்தீர்கள். என்.பி.ஆர். கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் முதன்முதலில் செய்தது நீங்கள் தான். அந்த அடிப்படையிலே தான் இப்படி பதற்றமான சூழ்நிலையில் அச்ச உணர்வோடு இருக்கின்ற அந்த மக்களுக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நாங்கள் இந்த தகவல்களை மத்திய அரசிடம் கேட்டு இருக்கின்றோம்.  

 நீங்கள் ஏதாவது ஒரு குற்றத்தை சுமத்த வேண்டும் என்ற அடிப்படையிலே பேசுகின்றீர்களே தவிர, உண்மைநிலையை பேசுவது கிடையாது. அவர் இங்கே பேசியிருக்கின்ற குறிப்பை பற்றி தான் சொல்ல முடியுமே தவிர, பத்திரிகை செய்தி பற்றி எல்லாம் சொல்ல முடியாது. அவையில் இருக்கின்ற குறிப்பை தான் சொல்ல முடியும்.

அவையில் பதிவு செய்யப்பட்ட குறிப்பின் அடிப்படையில் தான் நீங்கள் கேள்வி கேட்க முடியுமே தவிர, பத்திரிகைகளை வைத்து எல்லாம் நீங்கள் கேள்வி கேட்க முடியாது. இதை எல்லாம் நாங்கள் கைக்கட்டி வேடிக்கை பார்க்க முடியாது. நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசுவீர்கள், உள்ளே ஒன்று பேசுகிறீர்கள், வெளியில் போய் ஒன்றை பேசுகிறீர்கள். ஆனால் வெளியில் பேசுகின்ற செய்தி தான் மக்களை போய் சேர்கிறது. இதனால் மிகப் பெரிய பதற்றம் ஏற்படுகிறது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

அடேங்கப்பா, அதிரடிதான்.