முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்! இயற்கை நமக்கு சாதகமாக இருப்பதால் வேளாண் பெருமக்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று வருகிறார்.


அந்த வகையில், இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரம்ப காலக்கட்டத்தில் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் மூலம் பல்வேறு இடங்களில் அதிகரித்ததை, படிப்படியாகக் குறைக்கக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதற்கு சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையும் துணை நிற்கின்றன.

இது எளிதாகப் பரவக் கூடியது என்று நான் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறேன். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடித்து, குணமடைய செய்யக்கூடிய சூழ்நிலை இல்லாத நிலையில், இந்த நோயின் தன்மை மற்றும் வீரியத்தை அறிந்து பொதுமக்கள் அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அதிகமாக மக்கள் வசிக்கின்ற காலனி போன்ற பகுதிகளில் தலைவலி, காய்ச்சல் போன்றவை வரும்பொழுது, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாண்புமிகு அம்மாவின் அரசு தனிக்கவனம் செலுத்தி, ஒரு சிறப்பு திட்டமாக மினி கிளினிக் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று நேற்றையதினம் அறிவித்திருக்கின்றோம்.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் ஆரம்பிக்கப்படும். மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோர் இருப்பர். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருக்கும் இந்த சூழ்நிலையில், காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்பட்டால் கூட, அதற்கு சிகிச்சை பெற சிரமமாக உள்ளது.

இந்த குறைகளை போக்க வேண்டுமென்பதற்காக, மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த மினி கிளினிக்குகளை உருவாக்க இருக்கிறது என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் ஏழை, எளிய மக்கள் மற்ற நோய்களிலிருந்து விடுபடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல தடுப்பணைகளை கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள ஷட்டரை சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக, பொதுப்பணித் துறையின் சார்பாகவும், ஊராட்சி ஒன்றியங்களின் சார்பாகவும், பல ஏரிகள் தூர் வாரப்பட்டிருக்கின்றன. இத்திட்டத்தினால், ஏரிகள் ஆழமாவதுடன், ஏரிகளிலிருந்து அள்ளப்படுகின்ற வண்டல் மண் விவசாயிகளின் நிலத்திற்கு இயற்கை உரமாகப் பயன்படுகிறது. இதன்மூலம் விளைச்சல் அதிகமாகிறது. அங்கு உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் உடலுக்கு நலம் பயக்கும்.  

இதுபோன்ற அரசின் நல்ல திட்டங்களினால், வேளாண் பெருமக்கள், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக நெல் விளைச்சலை பெற்றிருக்கிறார்கள். வேளாண் மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளின் மூலமாக பயிர்க்கடன் வழங்கிய காரணத்தினால், அதிக நிலப்பரப்பில் வேளாண் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். சுமார் 6 லட்சம் ஏக்கருக்கு மேலாக கூடுதல் பரப்பில் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இயற்கை நமக்கு சாதகமாக இருந்த காரணங்களால், வேளாண் பெருமக்களுக்கு கூடுதலான வருமானமும் கிடைத்திருக்கிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையில் பல பாலங்கள் மற்றும் ரயில்வே கடவுகளின் குறுக்கே பாலங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். பொதுமக்கள் அரசை நாடி செல்வதற்குப் பதிலாக, அரசாங்கமே பொதுமக்களை நாடி சென்று அவர்களது கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டம் என்ற திட்டத்தை சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டேன்.

இந்த திட்டத்தின் மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 46,840 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டதில், சுமார் 35,050 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. பட்டா மாறுதல் வேண்டி பெறப்பட்ட 11,451 மனுக்களில், 9,381 மனுக்களுக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வேண்டுமென்று 13,808 உழைக்கும் திறனற்ற முதியோர் விண்ணப்பித்ததில், தகுதி வாய்ந்த 12,284 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.