கொரோனா தொற்று காரணமாக எதிர்க் கட்சியினர் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நேரத்திலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கொரோனா அறிவுறுத்தல்.! முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் எச்சரிக்கையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும்..

இன்று அவர் வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா ஆய்வு நடத்தினார். மேலும், ஆட்சி வளாகத்தில் வளர்ச்சி பணிகளைத் தொடங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘’இ.பாஸ் குறித்து மீண்டும் மீண்டும் சிக்கல் வரக்கூடாது என்பதற்காகவே, பொதுமக்கள் நலன் கருதி இ-பாஸில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும். அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்லாதீர்.
மேலும், மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் எச்சரிக்கையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழகம்தான் என்று தெரிவித்துள்ளார்.