இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டம் கொடிகட்டிப் பறக்கிறது. அதில் ஏகப்பட்ட பேர் தொடர்ந்து தற்கொலை செய்துவருகின்றனர். தமிழகத்திலும் தற்கொலைகள் நீடிப்பதையடுத்து, அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை… எடப்பாடி பழனிசாமி அதிரடி. ராமதாஸ் பாராட்டு

இதுகுறித்து அவர், “ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு பலதரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்திருக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யப் பரிசீலனை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர்கள், மக்களின் பணத்தைப் பறிக்கும் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே பணம் வைத்து விளையாடுபவர்களையும், அதனை நடத்துபவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும்” என்றார்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் நடவடிக்கைக்கு தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை கூட்டணிக் கட்சித் தலைவரான ராமதாஸ் பாராட்டி வரவேற்றுள்ளார்.