ஜெ. நினைவிடம்... ஜெ. நினைவில்லம் அடுத்து ஜெ. கோயில்... முதல்வரின் ஹாட்ரிக் சாதனை

தமிழகத்தையே குலுக்கும் வகையில் ஜெ. நினைவிடத்தை திறந்துவைத்து சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த நாளே ஜெயலலிதாவின் நினைவில்லத்தையும் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். அது மட்டுமின்றி, இன்று ஜெயலலிதா கோயிலையும் திறந்து வைத்துள்ளார்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.குன்னத்தூரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரால் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 12 ஏக்கர் நிலபரப்பில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் 7 அடி உயர முழு உருவ வெண்கலச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலையும் 400 கிலோ எடை கொண்டதாகும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருக்கோவில் திறப்பு விழா இன்று காலை நடந்தது. முன்னதாக கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. திருக்கோவிலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வணங்கினர்.

பின்னர் நடைபெற்ற கோ பூஜையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 120 பசுகளை தானமாக வழங்கினர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் நலிவுற்ற அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு சால்வை மற்றும் பொற்கிழிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் வேல் வழங்கப்பட்டன.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் உண்மையான வாரிசு எடப்பாடிதான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் முதல்வர்.