பசும்பொன் தேவருக்கு எடப்பாடி பலே மரியாதை..! சசிகலா ஆதரவாளர்களை தக்கவைக்கும் வியூகம் பலிக்குமா?

கொங்கு மக்களுக்கு மட்டுமே வேண்டப்பட்டவர், சேலம் மக்களுக்கு மட்டுமே தேவையான உதவிகளை செய்பவர் என்று எடப்பாடி பழனிசாமி குறித்து மற்ற பகுதி மக்களுக்கு அதிருப்தி உண்டு. அதனை தீர்க்கும் வகையில் முக்குலத்தோருக்கு அரசு விழாவை பிரமாண்டமாக கொண்டாடி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 112ஆவது பிறந்தநாள் மற்றும் 57ஆவது குருபூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பலரும் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.  

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. இன்றையதினம் மறைந்த மரியாதைக்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாருடைய 112வது பிறந்தநாள் விழா, 57வது குருபூஜை விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவிலே அரசின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தேவர் திருமகனாருடைய நினைவிடத்திற்கு வருகை தந்து அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இந்த ஆண்டும் அரசின் சார்பாக, முதலமைச்சரான நானும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களும்,

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தலைமைக் கழகத்தின் நிர்வாகிகளும், கழகத்தினுடைய நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களோடு இன்றையதினம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தியிருக்கின்றோம்.

 இராமநாதபுரத்தில் 1937ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரியாதைக்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனார். அதற்குப் பிறகு 1946ஆம் ஆண்டு சென்னை மாகாணத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதற்குப் பிறகு 1952, 1957, 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் ஒரே நேரத்தில் வெற்றிபெற்ற பெருமைக்குரியவர். பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்துகின்ற விதமாக, அவருக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக, இந்த நாட்டிற்கு செய்த சேவையின் காரணமாக, தேவர் திருமகனாருக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பாக அரசு விழா எடுக்கப்படும் என்று அறிவித்து, 1979ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து அவருடைய பிறந்த நாளான அக்டோபர் 30-ஆம் தேதி அரசின் சார்பாக பசும்பொன் கிராமத்திலுள்ள அவருடைய நினைவிடத்திலே அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,

1994ஆம் ஆண்டு சென்னை நந்தனத்தில், மரியாதைக்குரிய மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களுக்கு முழு வெண்கல திருவுருவச்சிலையை நிறுவி அவரே திறந்து வைத்தார். 2010ஆம் ஆண்டு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், பசும்பொன் கிராமத்திலுள்ள அவருடைய நினைவிடத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாருடைய திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அளிக்கப்படும் என்று அறிவித்து, 2014ஆம் ஆண்டு பசும்பொன் கிராமத்திற்கு நேரடியாக வந்து 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை வழங்கினார்கள்.

இவ்வாறு மரியாதைக்குரிய மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாருடைய புகழுக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக பல்வேறு காலகட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டது என்பதை இந்த நேரத்தில் நினைவுகூற கடமைப்பட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்லாமல், தேவர் திருமகனார் அவர்கள் தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர். அதனால் தான் அவர் தெய்வீக திருமகனார் என்று அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.

அப்படி புகழ்வாய்ந்த அந்த திருமகனார் இந்த மண்ணிலே இருந்து மறைந்தாலும், அவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு செய்த சேவைகள் என்றைக்கும் மக்கள் மனதில் குடிகொண்டிருக்கிறது. அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவிடத்திலே அரசும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் புகழஞ்சலி செலுத்தி பெருமை சேர்க்கின்றனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

ஆனால், தேவர் பெயரை விமான நிலையத்துக்கு சூட்டுவது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை முதல்வர். ஆக, இன்னமும் பிரச்னைதான்.