எதற்காக எடப்பாடி திடீர் ஆலோசனைக் கூட்டம்..? பா.ஜ.க.வை கழட்டிவிடப் போறாங்களா..?

எதற்காகவும் அமைச்சரவைக் கூட்டம், கட்சிக் கூட்டம் போன்றவற்றைக் கூட்டுவதை விரும்பாதவர் எடப்பாடி பழனிசாமி. ஏனென்றால், ஏதாவது ஒரு பஞ்சாயத்துக்காக கூட்டம் கூட்டினால், அதையொட்டியே பல பஞ்சாயத்துக்குள் உருவாவது வழக்கம்.


ஆனால், இப்போது திடீரென தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு அ.தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து இன்று அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது. 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும்; தேர்தல் பணிகள் குறித்தும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில் வருகின்ற 10.2.2020 - திங்கட்கிழமை முதல் 13.2.2020 - வியாழக்கிழமை வரை தினமும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 10 மணிவரையிலும் மாவட்ட வாரியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்ட உறுப்பினர்களும் எப்போது சந்திக்க வேண்டும் என்பதையும் பட்டியல் போட்டுள்ளது. திடீரென இந்தக் கூட்டம் எதற்காக என்று கட்சியினரிடம் பேசினோம்.

பா.ஜ.க.வை கூட்டணியில் வைத்திருப்பது அ.தி.மு.க.வுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதனால், அதனை கழட்டிவிடலாமா என்பது குறித்து ஆலோசனை செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உள்ளாட்சித் தேர்தலை அடுத்து நடத்தலாமா என்றுதான் கேட்பார்கள். ஆனால், அவர்களே முடிவெடுப்பார்கள் என்று நொந்துகொண்டார்கள்.

ஜெ. காலத்தில் இருந்து அப்படித்தானே நடக்குதுங்க.