முதல்வர் எடப்பாடி பழனிசாமியை காப்பாற்ற, அவரது மைத்துனர் களத்தில் இறங்கியுள்ளார்.
மை டியர் மச்சான்; மனசு வச்சான்: மாமாவை காப்பாற்ற களமிறங்கினார் எடப்பாடியின் மைத்துனர்!

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல், திமுக.,வுக்கும், அதிமுக.,வுக்கும் வாழ்வா, சாவா போராட்டமாக மாறியுள்ளது. மக்களவைத் தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்காவிட்டாலும், அதிமுக ஆட்சியை தக்க வைக்க, சட்டமன்ற இடைத்தேர்தலில், குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அதிமுக.,வினர் மிகத் தீவிரமாக, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். இதேபோல, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இது முக்கிய தேர்தலாக உள்ளது. அவரது தலைமையில் அதிமுக இந்த தேர்தலில் என்ன செய்யப் போகிறது என பல்வேறு தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், முதல்வரின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் மக்களவைத் தொகுதியை அதிமுக வென்றே ஆக வேண்டும். இல்லை எனில், எடப்பாடியின் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும். இதுதவிர, 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில், குறைந்தபட்சம் 10 தொகுதிகள் வரை கைப்பற்ற எடப்பாடி திட்டமிட்டுள்ளாராம்.
அதற்காக, அவரது மைத்துனர் வெங்கடேஷ் காளியண்ணன், சேலம், நாமக்கல், உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாகச் சென்று, திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறாராம். எப்படியேனும் மாமா எடப்பாடியை காப்பாற்ற வேண்டும் என்பதால், மைத்துனர் வெங்கடேஷ்க்கும் இது முக்கியமான தேர்தலாக மாறியுள்ளது. வெங்கடேஷ், ஜெயலலிதா காலத்தில் இருந்தே சங்ககிரி ஒன்றிய நிர்வாகியாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.