இரண்டு புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு, எடப்பாடி ஹேப்பி அண்ணாச்சி..!

நீண்ட காலம் கழித்து ஜெயலலிதா சமாதிக்குப் போயிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஏனென்றால், இன்றுதான் அவர் ரொம்பவும் ஹேப்பியாக இருக்கிறாராம்.


அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து தொடர்ந்து சிக்கல், போட்டி, பொறாமை, தோல்விதான் கிடைத்தது. ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. மிகவும் மோசமாக டி.டி.வி.தினகரனிடம் தோற்றுப் போனது. 

அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் மோசமாகத் தோற்றது. அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரும்பான்மையை தக்கவைக்கும் அளவுக்கு சட்டமன்றத் தொகுதிகளை ஜெயித்ததே தவிர, மரியாதையான வெற்றி பெறவில்லை. அடுத்து நடந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலிலும் தோற்றுப்போனது.

இவற்றை எல்லாம் கடந்து சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் இரண்டையும் வென்று சாதனை படைத்துள்ளது. அதனால்தான் எடப்பாடி ரொம்பவும் சந்தோஷமாம்.

இன்று அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் நடைபெற்றது. நாங்குநேரி சட்டமன்றப் பேரவைத் தொகுதியிலிருந்து தோந்தெடுக்கப்பட்ட வெ. நாராயணன் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றப் பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ர.முத்தமிழ் செல்வன் ஆகியோருக்கு பேரவைத் தலைவர் தனபால் பதவிப்பிரமானம் செய்துவைத்தார். அப்போது எடப்பாடியாரும் பன்னீரும் கலந்துகொண்டனர்.

அந்த சந்தோஷத்தில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இனி, எல்லாமே வெற்றிதான் என்று அ.தி.மு.க.வினர் ஆனந்தத்தில் இருக்கிறார்களாம்.