இளைஞர் மார்பில் குத்தி முதுகு வழியாக வெளியே வந்த 4 அடி நீள கம்பி! விபத்தில் சிக்கியவருக்கு ஹாஸ்பிடலில் நேர்ந்த அதிசயம்!

இருசக்கர வாகன விபத்தின்போது மார்பை துளைத்தெடுத்த கம்பியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக எடுத்துள்ளனர். இதனால் மரண வாசலுக்கு சென்ற இளைஞர் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளார்.


மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த குருசாமி கடந்த வாரத்தில் மதுபானம் குடித்துவிட்டு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திடீரென வாகனம் நிலை தடுமாறியதில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கும் குழியில் விழுந்துள்ளார்.

அப்போது குருசாமியின் மார்பை பிளந்து கொண்டு உள்ளே சென்ற 4 அடி நீளம் கொண்ட கூர்மையான கம்பி முதுகு வழியே வெளியில் எட்டி பார்த்தது. இந்த விபத்தில் சாதாரண காயம் அடைந்த உடன் வந்தவர் பொதுமக்கள் உதவியுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

விபத்தில் காயம் அடைந்து மயக்க நிலையில் இருந்த குருசாமிக்கு தொடர்ந்து 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் தீவிர போராட்டடத்தில 4 அடி நீள கம்பி வெற்றிகரமாக அப்புறப்படுத்தப்பட்டது. 

இரும்புக் கம்பி மூளைக்குச் செல்லும் முக்கிய ரத்த நாளங்களான கழுத்து பெரு நரம்பு மற்றும் தமனிகளையும் துளைத்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள நிபுணர், மயக்க மருந்து நிபுணர், நரம்புமண்டலச் சிறப்பு அறுவை நிபுணர் என ஒட்டுமொத்த மருத்துவர்களின் கூட்டு முயற்சியே அறுவை சிகிச்சை வெற்றிக்குக் காரணம் என தெரிவித்தனர்.

எமதர்மன் வீட்டு காலிங் பெல்லை தட்டிவிட்டு திரும்பிய குருசாமியை ஆச்சரியத்துடன் சக நோயாளிகள் பார்க்கின்றனர்.