காதல் மனைவியை கொலை செய்த கஞ்சா கணவன்..! போலீஸார் விசாரணையில் திடீர் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கஞ்சா போதைக்கு அடிமையான கணவன் காதல் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோரை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது


திருப்பூர் மாவட்டம் நல்லூர் பாளையம் அருகே காட்டில் உள்ள முட்புதரில் அனுப்பர் பாளையத்தை சேர்ந்த சுகன்யா என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கோவிந்தராஜ் முனியம்மாள் தம்பதியின் ஒரே மகளான சுகன்யா 12ம் வகுப்பு படிக்கும்போது இமானுவேல் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். சுகன்யா இமானுவேல் தம்பதிக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.

காதல் மனைவியுடன் வாழ்க்கை கசந்து போக வேலையில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த இமானுவேல் குடிப்பழக்கம் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானார். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறும் நிகழ்ந்து வந்துள்ளது.

இமானுவேல் போதையால் அட்டகாசம் செய்வதும் தம்பதி அடிக்க சண்டை போடுவதையும் பார்க்கும் அக்கம் பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் வேறு வழியின்றி 2 குழந்தைகளுடன் அடிக்கடி வீடு மாற்றியுள்ளார் சுகன்யா. ஒரு கட்டத்தில் இவர்கள் பிரச்சனையில் தலையிட்ட அவரது பெற்றோர் தங்கள் வீட்டருகிலேயே அவர்களை குடியமர்த்த செய்தனர்.

ஆனாலும் கஞ்சாவுக்கு அடிமையான இமானுவேல் அதை வாங்க காசு இல்லாமல் சுகன்யா மீது மயக்க மருந்து தெளித்து அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த மொபைட் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் திடீரென சுகன்யாவை தொடர்பு கொண்ட இமானுவேல் தான் திருந்தி விட்டதாகவும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் இது குறித்து நேரில் பேச வேண்டும் என அழைத்துள்ளார்.

இமானுவேலின் ஆசை வார்த்தையை நம்பி வீட்டில் பெற்றோருக்கு கூட சொல்லாமல் இமானுவேலை சந்திக்க பெத்தாம்பாளையம் காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் ஆத்திரமடைந்த இமானுவேல் சுகன்யாவை கொன்று அவரது முகத்தை அடையாளம் தெரியாதவாறு முகத்தை சிதைத்து சின்னா பின்னமாக்கி உள்ளார்.

இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிந்து இமானுவேலை தேடி வந்தனர். இமானுவேலின் செயலைக் கண்டு அவரது பெற்றோரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். யாரும் இல்லையென வீட்டு உரிமையாளரால் பூட்டு போடப்பட்ட இமானுவேல் வீட்டில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து பார்த்தபோது இமானுவேல் தூக்குக் போட்டுக் கொண்ட நிலையில் சடலமாக இருந்ததை பார்த்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரிக்கையில் வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறை வழியாக உள்ளே நுழைந்து இமானுவேல் தூக்குப் போட்டுக் கொண்டது தெரிய வந்துள்ளது.

காதல் மனைவி 2 குழந்தைகளுடன் அழகான வாழ்க்கை வாழாமல் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி கொலைகாரனாகி போலீசுக்கு சமுதாயத்துக்கு பயந்து தன்னுடைய விலைமதிப்பற்ற உயிரை மாய்த்துக்கொண்டதால் 2 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.