சென்னை-அண்ணா பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பவியல் துறையில் (பயோடெக்) பட்டமேற்படிப்பு இடங்களுக்கு இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழக நிர்வாகம் கைவிட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிப்பு காட்டியுள்ளது.
மேற்படிப்பை கைவிடுவதா... அண்ணா பல்கலைக்கு திருமாவளவன் எச்சரிக்கை.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக். கம்ப்யூடேஷனல் பயாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இரண்டு நுழைவுத் தேர்வுகள் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆனால், இந்த ஆண்டு அவ்விரண்டு தேர்வுகளையும் மத்திய உயிரித் தொழில்நுட்பத் துறையின் கீழுள்ள நிறுவனம் நுழைவுத் தேர்வை நடத்தியது. அத்துடன், மாணவர் சேர்க்கையை மட்டும் அந்தந்த கல்வி நிறுவனங்களே மேற்கொள்ளும் நிலை நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், அண்ணா பல்கலைகழகத்தின் பயோடெக் துறையில் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டைப் பின்பற்றமுடியாது என மறுதலித்ததுடன், மாணவர் சேர்க்கையையும் முற்றாக கைவிட்டுள்ளது. இதனால், நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் எதிர்காலம் பாழாக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் இதர பல்கலைக்கழகங்களில், எம்.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுமூலம் இடஒதுக்கீட்டுடன் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் மாணவர்களின் சேர்க்கையைக் கைவிட்டிருப்பது 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சூழ்ச்சியைக் காட்டுகிறது.
இந்நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எம்.டெக். பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூடேஷனல் பயாலஜி ஆகிய துறைகளுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்த வேண்டுமெனவும் 69% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.