மனைவியை கத்தியால் குத்திவிட்டு, தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரி - வண்ணாரப்பேட்டை அதிர்ச்சி

பதுவண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி ஒருவர் மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செங்குன்றம் புதுவண்ணாரப்பேட்டை அருகே உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் நரேஷ். இவர் தனது மனைவி ஜெயஸ்ரீ உடன் பெரம்பூர் பகுதியில் இருக்கக்கூடிய காவலர் குடியிருப்பு பகுதியில்  வசித்து வருகிறார். இவர்களுக்கு தருண்  என்ற 7 வயது மகன் உண்டு.

அவர் புத்தகரம் பகுதியில் உள்ள ஜெயஸ்ரீ தாய் வீட்டில் தங்கி அவர் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய பள்ளியில் படித்து வருகிறார். நரேஷுக்கு குடிப்பழக்கம் இருந்தமையால் அதனை விட்டு விடக் கோரி ஜெயஸ்ரீ அடிக்கடி அவரிடம் சண்டை இட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி அவர்களுக்கு இடையே உறவினர்கள் சமாதானம் செய்து வைப்பது வழக்கம்.

இந்நிலையில் ஒருநாள் இருவருக்கும் மோதல் முற்ற ஜெயஸ்ரீ தனது தாய் வீட்டிற்கு சென்று பின் அங்கிருந்து வியாசர்பாடி பகுதியில் இருக்கும் தனது தாய் மாமன் சரவணன் வீட்டிற்கு தாய் மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். இதனை அறிந்த நரேஷ் தாய்மாமன் வீட்டிற்குச் சென்று இனி என் மனைவியிடம் சண்டை போட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்து அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

பின் சமாதானம் அடைந்த ஜெயஸ்ரீ அவருடன் தாய்வீடான புத்தகரத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று மகனை உறங்க வைத்து விட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். 

பின் மீண்டும் நரேஷ் ஜெயஸ்ரீ கண்முன்னாடியே மது பாணத்தை எடுத்து குடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த அவர் கண்மூடித்தனமாக திட்டியுள்ளார். பின் இருவரும் சண்டையிட்டு வார்த்தைகளை விட தொடங்கினார்.

பின் ஒருவர் மீது ஒருவர் சந்தேகங்களை எழுப்ப ஆத்திரமடைந்த நரேஷ்  ஜெயஸ்ரீயை கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் நரேஷும் தனது அறையில் இருக்கக்கூடிய காற்றாடியில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 இந்நிலையில் தாய்மாமன் சரவணன் இருவரும் சமாதானமாக உள்ளனரா? என்று சோதிக்க இருவருக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இருவரும் எடுகாததன் காரணமாக  புத்தகரத்தில் உள்ள வீட்டிற்கே சென்று கதவினை நீண்ட நேரம் தட்டியுள்ளார்.

இருவரும் திறக்காததால் சந்தேகித்து ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது, ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்திலும்  நரேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும்  சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.