திடீரென உயிரிழந்த உரிமையாளர்! உடலை விட்டு நகர மறுத்த பாசக்கார நாய்! நெகிழ வைக்கும் சம்பவம்!

மெக்சிகோவில் ரயில் விபத்தில் உரிமையாளர் உயிரிழந்த நிலையில் அவர் உடல் கிடந்த இடத்தை விட்டு அகல மறுத்த அவரது வளர்ப்பு நாய் அவரது உடலை யாரும் அணுக விடாமலும் அடம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மாண்டி மொரேலோஸ் நகரத்தை சேர்ந்தவர் விக்டர் ரெய்னா. குடி பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த சில ஆண்டுகளாக ஒரு நாயை வளர்த்து வந்தார். சில தினங்களுக்கு முன் இவர் மூச்சு முட்டக் குடித்திருந்த நிலையில் ரயில் தண்டவாளம் அருகே தள்ளாடியபடி நடந்து செல்ல, அவரது நாயும் உடன் சென்றது.

அப்போது ரெய்னா தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது வேகமாக வந்த ஒரு ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் ரெய்னாவை விட்டுச் செல்ல்லாமல் அவரது நாய் அவரது உடலையே சுற்றி சுற்றி வந்தது. 

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும், மருத்துவக் குழுவினரும் ரெய்னாவின் உடலை எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது அந்த நாய் அவரது உடலை மற்றவர்கள் அணுக விடாததால்  உடலை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மிகுந்த சிரமத்துக்கிடையே ரெய்னாவின் உடலை நாயிடம் இருந்து காவல்துறையினர் பிரித்து எடுத்தனர்.

உரிமையாளர் இறந்தது தெரிந்தோ தெரியாமலோ தன்னை வளர்த்தவரை விட்டு பிரிய மறுத்த நாய் அனைவரையும் நெகிழச் செய்தது.