கல்யாணம் என கூறி காதலியுடன் உடலுறவு கொண்டாலும் கற்பழிப்பு தான்! உச்சநீதிமன்றம் அதிரடி!

திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடூத்து பெண்ணுடன் உடலுறவு கொள்வதும் பாலியல் பலாத்காரமே என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


சட்டீஸ்கர் மாநிலம் கோனி பிலாஸ்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த பெண் ஒரு மருத்துவரை கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து அந்த மருத்துவர் அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது. 

ஆனால் சில மாதங்கள் கழித்து வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மருத்துவர் மீது பாலியல் பலாத்காரப் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. 

அதற்கு எதிரான மருத்துவரின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, இது பெண்மையின் போற்றத் தக்க மரியாதையையும், கண்ண்ணியத்தையும், குலைக்கும் செயல் என்றார். நாகரிக சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் இது போன்ற சம்பவங்கள் பெண்ணை ஒரு மிருகத்தைப் போல நடத்தும் அவல நிலையை உணர்த்துவதாகக் கூறினார். 

பாலியல் பலாத்காரம் நெறிமுறைகளைச் சார்ந்தும் உடல் ரீதியாகவும் மிகவும் கொடுமையான குற்றம் என்ற அவர் அது பெண்ணின் உடல் மனம், மற்றும் தனியுரிமையை பாதிப்பதாகக் கூறினார். கொலை என்பது உடலை அழிக்கும் நிலையில் பாலியல் பலாத்காரம் என்பது நிர்க்கதியான பெண்ணின் ஆன்மாவை பாதிப்பதாகக் கூறினார். எனினும் குற்றவாளியின் தண்டனையை அவர் 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாகக் குறைத்தார்.