சீன அதிபரை அழைத்துக் கொண்டு மகாபலிபுரத்துக்கு ஏன் வருகிறார் மோடி? ஒரு பரபரப்பு ரிப்போர்ட்!

உலக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, உள்ளூர் பயணம் தொடங்கியிருக்கிறார் நரேந்திர மோடி. அந்த வகையில் சீன பிரதமரை சென்னை மகாபலிபுரத்தில் வைத்து சந்திப்பதாக தகவல் கசிகிறது.


இது சாதாரண சந்திப்பு அல்ல என்று பா.ஜ.க.வுக்கு ஜால்ரா போட்டுவரும் பத்திரிகை அதிபர் கோபால்ஜி ஒரு நீண்ட பதிவு போட்டிருக்கிறார். மோடி, இங்கே வரவில்லை என்றால் மகாபலிபுரத்தை யாருக்குமே தெரியாமல் போயிருந்திருக்கும் என்ற அளவுக்கு இருக்கும் அவரது பதிவைப் பாருங்கள். 2014ல் பிரதமராக மோடி பதவியேற்றபோது, ‘‘நாட்டின் வளர்ச்சி ஒரே பகுதியில் குவிக்காமல் பரவலாக்கப்படும்.

தலைநகர் டில்லிக்கு மாத்திரமே முக்கியத்துவம் அளிக்காமல், நாட்டில் எல்லா பகுதியில் உள்ள நகரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்’’ என்று அறிவித்தார். அவர் பிரதமரான பிறகு, சீன அதிபர் ஜீ ஜின்பிங் முதல்முறையாக இந்தியா வந்தபோது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சந்திப்பு நடந்தது. ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே இந்தியா வந்தபோது, மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் அவர்களின் சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்புக்காக இருநாட்டு தலைவர்கள் சம்பந்தப்பட்ட நகருக்கு செல்லும்போது, அதை காரணமாக கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. அந்த நகரின் மீது சர்வதேச நாடுகளின் கவனம் குவிகிறது. அது அந்த நகரத்தின் முக்கியத்துவத்தை பிரபலப்படுத்தி சுற்றுலா மேம்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நகரின் உள்கட்டமைப்பு மேம்படுவதோடு, சுற்றுலா மூலம் உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி பெறுகிறது.

அந்த வகையில், இந்தியா வர இருக்கும் சீன அதிபருடன் மோடி சந்தித்து பேச தமிழகத்தின் மாமல்லபுரம் இப்போது தேர்வாகியுள்ளது. சீன அதிபருடன் பிரதமர் மோடி, மாமல்லபுரத்தில் சந்திக்கிறார் என்பது சர்வதேச செய்தி. அதன் மூலம் மாமல்லபுரத்தின் மீதான சர்வதேச நாடுகளின் பார்வை அதிகரிக்கும். மாமல்லபுரத்தின் புராதனம், வரலாற்று பெருமை, கலாச்சார சிறப்பு என்பதையெல்லாம் இதுவரை தெரியாமல் இருந்தவர்களுக்கும் இப்போது தெரியவரும்.

ஏற்கனவே, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விரும்பத்தகுந்த நகராக இருக்கும் மாமல்லபுரத்துக்கு புதிய விளம்பரம் கிடைக்கும். அதோடுகூடவே மாமல்லபுரத்தை ஆண்ட பல்லவர்கள் வரலாறு, அவர்கள் உருவாக்கிய கலைப்பொக்கிஷங்களின் பெருமைகள் நாடு முழுவதும் கவனிக்கப்படும் விஷயமாகும். அது அந்த நகரின் வர்த்தகத்தை மேம்படுத்தும். அந்த வகையில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாமல்லபுர வருகை வரவேற்கத்தக்கது. தமிழர்களின் விருந்தோம்பல் குணமும் இருநாட்டுத் தலைவர்களுக்கு தெரிய வரட்டும்.

இதேபோல், சர்வதேச தலைவர்கள் சந்திப்பு மட்டுமல்லாது, திட்டங்கள் தொடக்கம் உட்பட மத்திய அரசு விழாக்களை தலைநகரை தாண்டி பிற நகரங்களுக்கும் பரவலாக்கும்போது நாட்டின் எல்லா நகரங்களும் முக்கியத்துவம் பெறும். அது நம்முடைய பன்முகத்தன்மையையும் அதன் வலிமையையும் மேலும் மெருகூட்டும்.

மத்திய அரசு என்பது ஏதோ டில்லியில் இயங்கும் ஒரு அமைப்பு என்ற அன்னியத்தோற்றம் மறைந்து, எல்லா மாநில மக்களுக்கும் மத்திய அரசுடனான பந்தம் நெருக்கமாகும். அது நாட்டு மக்களிடையே தேசிய உணர்வை வலுப்படுத்தும் என்று எழுதியிருக்கிறார் கோபால்ஜி.

பத்திரிகையாளர் கோட்டாவில் எப்படியாவது எம்.பி. பதவி வாங்கிவிட வேண்டும் என்பதுதான் கோபால்ஜியின் தீராத ஆசையாம். அதுக்காக இப்படியாப்பா ஜிங்சாங் போடுவது?